இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான நான்காவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், 4வது போட்டி வெலிங்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல் 12:30 மணியளவில் தொடங்குகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணி வெற்றிக்கான வேட்கையில் உள்ளது. தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி வெற்றி வேட்டையை தொடரும் முனைப்பில் விளையாடவுள்ளது. தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்கள் இன்றைய போட்டியில் களம் இறக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.