ராஸ் டெய்லர் அதிரடியில் பங்களாதேஷை வென்றது நியூசி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரின் 9வது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. லண்டனில் நடந்த இந்தப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருந்தலும் செளமியா சர்கார் 25 (25) ரன்னிலும், தமிம் இக்பால் 24 (38) ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்த வந்த ஷாகிப் உல் ஹசன் நிலைத்து நின்று 64 (68) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 49.2 ஓவர்களில் பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ராஸ் டெய்லர் அபாரமாக ஆடி 91 பந்துகளில் 82 ரன் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 40 ரன் சேர்த்தார்.
பங்களாதேஷ் தரப்பில் மெஹிடி ஹசன், ஷகிப் அல் ஹசன், சைபுதீன், மொசடெக் ஹூசைன் ஆகியோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 82 ரன் எடுத்த ராஸ் டெய்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.