100 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்த நியூசி வீரர்! இந்த க்ளப்பில் முதலிடம் யார்?

100 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்த நியூசி வீரர்! இந்த க்ளப்பில் முதலிடம் யார்?
100 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்த நியூசி வீரர்! இந்த க்ளப்பில் முதலிடம் யார்?

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃப்பி, 10 ஓவர்களில் 100 ரன்களை வழங்கி சாதனை படைத்துள்ளார்.

கடைசி ஒருநாள் போட்டி

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இன்று மத்தியப்பிரதேசம் இந்தூரில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. ஏற்கெனவே முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால் இன்றைய போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டும் என்ற நோக்கில் நியூசிலாந்து களம் கண்டது. இதையடுத்து, டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் இந்திய தொடக்க பேட்டர்களாய் கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் இருவரும் அடித்து விளையாடியதுடன், இருவரும் சதம் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.

100 ரன்களை வழங்கிய ஜேக்கப் டஃப்பி!

85 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து கில், 78 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து டிக்னர் பந்துவீச்சில் வீழ்ந்தார். அதற்குப் பிறகு களமிறங்கிய வீரர்களில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 38 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உதவியுடன் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

முன்னாள் கேப்டன் விராட் கோலி 36 ரன்களில் வெளியேறினார். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டஃப்பி மற்றும் டிக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதில் ஜேக்கப் டஃப்பியின் ஓவர்கள் இந்திய வீரர்களால் சிதறடிக்கப்பட்டது. அவர் 10 ஓவர்கள் வீசி 100 ரன்களை வாரி வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக டிக்னர் 10 ஓவர்கள் வீசி 76 ரன்களை வழங்கியுள்ளார்.

100 வழங்கியதிலும் சாதனை படைத்த ஜேக்கப்

ரோகித்தும், சுப்மான் கில்லும் ரன்களில் சதம் அடித்து சாதனை புரிய, ஜேக்கப் டஃப்பி 100 ரன்களை வழங்கி சாதனை படைத்துள்ளார். 100 ரன்னும் அதற்கு மேலும் வழங்கிய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃப்பி 15வது இடத்தில் உள்ளார். அவர், ஹசன் அலி மற்றும் ஜா டஃப்பி ஆகிய வீரர்களுடன் இணைந்துள்ளார். இவர்கள் மூவரும் தலா 100 ரன்களை வழங்கியுள்ளனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எம்.எல்.லீவிஸ் முதல் இடத்தில் உள்ளார்.

அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 10 ஓவர்கள் வீசி 113 ரன்களைக் கொடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் வீரர் வகாப் ரியாஸ் இங்கிலாந்துக்கு எதிராக 10 ஓவர்களில் 110 ரன்களை வழங்கியுள்ளார். அடுத்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீது கான் இங்கிலாந்துக்கு எதிராக 9 ஓவர்கள் வீசி 110 ரன்கள் வழங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து நெதர்லாந்து வீரர் பாய்ஸ்இவன் இங்கிலாந்துக்கு எதிராக 10 ஓவர்கள் வீசி 108 ரன்களை வழங்கியுள்ளார். மேற்கண்ட நான்கு பேரும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

100 ரன்களை வழங்கிய இரண்டு இந்திய வீரர்கள்

இந்தப் பட்டியலில் 5வது இடம்பிடித்திருக்கும் இந்திய வீரர் புவனேஷ்குமார் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 10 ஓவர்கள் வீசி 106 ரன்களை வழங்கியதுடன் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். இந்தப் பட்டியலில் இன்னொரு இந்திய வீரரும் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பந்துவீசிய ஆர்.வினய்குமார் 9 ஓவர்கள் வீசி 102 ரன்களை வழங்கி 1 விக்கெட் எடுத்துள்ளார். அதேநேரத்தில் இன்றைய போட்டியில், 100 ரன்களை வழங்கி 3 விக்கெட்களைக் கைப்பற்றிய பட்டியலில் நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃப்பிதான் முதலிடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் அதாவது, அதிக ரன்களை வழங்கி 3 விக்கெட்களைக் கைப்பற்றியவர்களில் ஜேக்கப் டஃப்பிக்கு அடுத்து, வங்கதேச வீரர் சாஃபுல் இஸ்லாம் 2வது இடத்திலும் (10 ஓவர் 95 ரன்கள் 3 விக்கெட்), இலங்கை வீரர் ஜெயசூர்யா 3வது இடத்திலும் (10 ஓவர் 94 ரன்கள் 3 விக்கெட்) உள்ளனர். 4வது இடத்தில் இலங்கை வீரர் மலிங்காவும் (10 ஓவர் 1 மெய்டன் 93 ரன்கள் 3 விக்கெட்), 5வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்ஸனும் (10 ஓவர் 1 மெய்டன் 92 ரன்கள் 3 விக்கெட்) உள்ளனர்.

சகநாட்டு வீரர்களுடன் இணைந்த ஜேக்கப் டஃப்பி!

இந்த 100க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கியவர்களின் பட்டியலில் நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃப்பியுடன் (15வது இடம்) சக நாட்டு வீரர்கள் இருவரும் 7 மற்றும் 8வது இடம்பிடித்துள்ளனர். நியூசிலாந்தைச் சேர்ந்த எம்.சி.சினேடன் இங்கிலாந்துக்கு எதிராக 1983ஆம் ஆண்டு 12 ஓவர்கள் வீசி 105 ரன்களை வழங்கி 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். அவருக்கு அடுத்த இடத்தில் சகநாட்டு வீரரான டி.ஜி.செளத்தி 2009ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 10 ஓவர்கள் வீசி 105 ரன்களை வழங்கியுள்ளார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com