உலகக் கோப்பை யாருக்கு? இன்று அனல் பறக்கும் ஃபைனல்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இதில் லீக் சுற்று முடிந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணியும், இரண்டாம் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதிய ஆஸ்திரேலிய அணியும் தோல்வி அடைந்தன. இதையடுத்து இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இந்தப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.
உலக கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அசத்தி வருகிறது. கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் பந்துவீச்சில் மிரட்டி வருகிறார்கள். பேட்டிங்கில் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ், ஜோ ரூட், கேப்டன் மோர்கன், பட்லர், பென் ஸ்டோக்ஸ் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அதனால் அந்த அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. லீக் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இருப்பதால், அந்த உற்சாகத்தோடு இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கும்.
நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு வரும் என்று அந்த அணி வீரர்களே கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். பேட்டிங்கில், அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டுமே நிலைத்து நின்று ஆடி வருகிறார். அவருக்கு துணையாக ராஸ் டெய்லர் இருக்கிறார். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. ஆனால், பந்துவீச்சில் அந்த அணியின் போல்ட், பெர்குசான், ஹென்றி ஆகியோர் மிரட்டுகிறார்கள். பீல்டிங்கும் அந்த அணியின் பலம். இவர்களால்தான் அந்த அணி இறுதிப் போட்டிவரை வந்திருக்கிறது. இன்றைய போட்டியிலும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கோப்பையை வெல்லலாம்.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 90 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இவற்றில் நியூசிலாந்து அணி 43 முறையும், இங்கிலாந்து அணி 41 முறையும் வெற்றி பெற்றுள்ளன. போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.