டி20 உலகக்கோப்பை: விராட் கோலி மற்றும் சூரியகுமார் செய்திருக்கும் புதிய ரெக்கார்டுகள்!

டி20 உலகக்கோப்பை: விராட் கோலி மற்றும் சூரியகுமார் செய்திருக்கும் புதிய ரெக்கார்டுகள்!
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி மற்றும் சூரியகுமார் செய்திருக்கும் புதிய ரெக்கார்டுகள்!

டி20 உலககோப்பை சூப்பர் 12 போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வெற்றிக்கண்டிருந்தது இந்திய அணி. அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் சூரியகுமார் இருவரும் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து சில புதிய ரெக்கார்டுகளை உருவாக்கியுள்ளனர்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையின் பெரிய தூண்களாக விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் இருக்கின்றனர். இந்த டி20 உலககோப்பையில் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஓபனர்கள் விரைவாகவே வெளியேறிவிட்டாலும் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடி அணியை கடைசிவரைக்கும் எடுத்து செல்கிறார். ஒருவேளை விராட்கோலியும் அவுட்டாகிவிட்டால் அந்த பொறுப்பையும் ஏற்று, அதிக அனுபவமில்லாத சூரியகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். இந்நேரம் இந்த இரண்டு வீரர்களை எப்படி வெளியேற்றுவது என்று அரையிறுதிக்கு செல்ல இருக்கும் அணிகள் திட்டம் தீட்டி வைத்திருப்பார்கள். அந்தளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் இருவரும்.

அந்த வரிசையில் நேற்று நடந்துமுடிந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதை அடுத்து இந்த உலககோப்பையிலும், ஐசிசி தரவரிசையிலும் புதிய அப்டேட்களை நிகழ்த்தி காட்டியுள்ளனர் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ்.

டி20 உலககோப்பை வரலாற்றில் புதிய சாதனை

டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்தியாவின் ரன்மெஷின் விராட் கோலி. 1065* ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலி முன்னர் 1016 ரன்கள் அடித்திருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனேவை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தற்போது ஆடிவரும் வீரர்களில் ரோகித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். இந்த சாதனையை நிகழ்த்திய பிறகு இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயவர்த்தனே விராட் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியல்

இந்த டி20 உலககோப்பையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறியுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் ஓபனர் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி டி20 தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார் சூரியகுமார் யாதவ். 863 புள்ளிகளுடன் சூரியகுமார் யாதவ் முதல் இடத்திலும், 842 புள்ளிகளுடன் முகமது ரிஸ்வான் இரண்டாவது இடத்திலும், 792 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் டெவான் கான்வே 3ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து அரைசதங்களாக விளாசியிருக்கும் விராட் கோலி தரவரிசையில் 15ஆவது இடத்திலிருந்து 5 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

நடப்பு டி20 உலககோப்பையில் அதிக ரன்கள்

இந்த டி20 தொடரில் இதுவரை இந்திய அணிகள் 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 3 போட்டிகளில் அரைசதம் அடித்து விளாசியிருக்கும் விராட் கோலி, இந்த டி20 உலககோப்பையின் அதிக ரன்கள் அடித்த வீரராக மாறியுள்ளார்.

3 அரைசதங்களுடன் 220 ரன்கள் அடித்திருக்கும் அவர், அதிக பேட்டிங்க் சராசரியுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அதில் 19 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும்.

டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன்

டி20 உலககோப்பையில் அதிக தொடர் நாயகன் விருது வாங்கிய ஒரே வீரராக விராட் கோலி நீடிக்கிறார். 2014 மற்றும் 2016 டி20 தொடர்கள் என இரண்டு முறை தொடர் நாயகன் விருது வாங்கி அசத்தியுள்ள விராட் கோலி, இந்த டி20 உலககோப்பைத்தொடரிலும் தொடர் நாயகன் விருதை பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றும் டி20 உலககோப்பை தொடர்களில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வாங்கிய சாதனையையும் விராட்கோலியின் வசமே உள்ளது. இதுவரை 6 முறை ஆட்ட நாயகன் விருது வாங்கியிருக்கும் அவர் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com