“எப்போதும் மற்றவர்களையே நம்பி இருக்காதீர்கள்” - பாக். மீது ரசிகர்கள் பாய்ச்சல்
உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்குள் நுழைவதற்கு எப்போதும் மற்றவர்களையே நம்பியிருக்காதீர்கள் என்று பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுடன் தோல்வியைத் தழுவிய போதும், பலம் வாய்ந்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளையே பாகிஸ்தான் தோற்கடித்தது. தான் தோற்கடித்த இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு செல்லும் நிலையில், தன்னால் செல்ல முடியவில்லையே என்ற விரக்தியில் பாகிஸ்தான் உள்ளது.
கடைசியாக நடைபெற்ற தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தொடர் வெற்றியை பதிவு செய்தது. இருப்பினும், அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு எட்டா கனியாகிவிட்டது. அதற்கு முக்கியமான காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் போட்டியிலே வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்ததுதான். அதுதான், பாகிஸ்தான் அணிக்கு மிக மோசமான ரன்ரேட் வர காரணம். ஏனெனில் அந்த ரன்ரேட் தான் பாகிஸ்தானுக்கு சிக்கலாக அமைந்துவிட்டது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை நேற்று இங்கிலாந்து அணி வீழ்த்தியதை அடுத்து தன்னுடைய அரையிறுதி வாய்ப்பில் இருந்து பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. அந்த அணிக்கும் இன்னும் ஒரு சதவீதம் வாய்ப்பே உள்ளது. நாளை நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மிக அதிகமான ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு வாய்ப்பு உள்ளது. 300 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவேண்டும். அதாவது, புதியதொரு உலக சாதனைப் படைக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பினை உணர்ந்து கொண்ட அந்நாட்டு ரசிகர்கள் அந்த அணிக்கு வாழ்த்துகளை சொல்லி வழியனுப்பி வருகிறார்கள். அடுத்த உலகக் கோப்பை தொடரில் பார்த்துக் கொள்ளலாம் என நிலைமையை உணர்ந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இன்னும் மற்ற அணிகளின் மீது பழி போடுவதிலேயே மும்மரமாக உள்ளனர்.
ஆம், இந்தியா - இங்கிலாந்து, நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுகள் பாகிஸ்தான் அணிக்காக அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துவிட்டது. இங்கிலாந்து அணி இந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஆனால், இந்தியா, நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தலாக அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என இந்திய ரசிகர்களை காட்டிலும் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்கள்தான் அதிகம் வேண்டினர். இந்திய அணிக்கு ஆதரவாக அப்படி பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், இந்திய அணி தோல்வியை தழுவவே, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழையக் கூடாது எனத் திட்டமிட்டே தோற்றதாக அவர்கள் சாடினர். வாக்கர் யூனிஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே பேசினர்.
சரி.. இந்தியா உடனான போட்டிதான் போய் விட்டது நியூசிலாந்தாவது இங்கிலாந்தை வீழ்த்துமா என பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால். நியூசிலாந்து அணி நேற்றைய போட்டியில் படுதோல்வி அடைந்தது. இப்பொழுது நியூசிலாந்து அணி வேண்டுமென்றே தோற்றதாக பாகிஸ்தான் வீரர்கள், ரசிகர்கள் கூறுகின்றனர். மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை மட்டுமே நம்பி இருப்பது குறித்து பாகிஸ்தானின் ஒருதரப்பு ரசிகர்களே கோபமடைந்துள்ளனர்.
மற்றவர்களை நம்பி இருக்காதீர்கள், சொந்த பலத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுங்கள் என்று ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் அணியை சாடி வருகின்றனர். முக்கியமான சில போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டு, இப்படி மற்ற அணிகளை நம்பி இருப்பது சரியா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மற்ற அணியின் வெற்றி தோல்வியை பாகிஸ்தான் அணி நம்பியிருப்பதை இந்தியா, பங்களாதேஷ் ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.