உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: அடுத்து சுற்றுக்கு செல்லும் 4 அணிகள்!

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: அடுத்து சுற்றுக்கு செல்லும் 4 அணிகள்!
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: அடுத்து சுற்றுக்கு செல்லும் 4 அணிகள்!

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியும் - கத்தார் அணியும் மோதின. ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ கத்தாரின் மூன்று தடுப்பாட்டாரர்களை சாதுர்யமாக கடந்து கோல் அடித்து அசத்தினார். 49வது நிமிடத்தில் நடுகள வீரர் ஃப்ரென்கி டி ஜாங் கோல் அடித்து அணியை மேலும் முன்னிலை படுத்தினார்.

இறுதிவரை போராடிய கத்தார் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. 2க்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்று குரூப் ஏ பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. கால்பந்து உலக கோப்பை வரலாற்றில் போட்டி நடத்தும் நாடு லீக் சுற்றின் 3 ஆட்டங்களிலும் தோற்பது இதுவே முதல் முறை.

அடுத்ததாக செனகல் - ஈக்குவேடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 44வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் செனகல் வீரர் இஸ்மாயிலா சார் கோல் அடித்தார். இதையடுத்து 67 நிமிடத்தில் ஈக்குவேடார் வீரர் மோய்சஸ் கைசெடோ கார்னர் கிக் வாய்ப்பில் கோல் அடித்து சமன் செய்ய ஆட்டம் சூடுபிடித்தது.  அடுத்த 3 நிமிடங்களுக்குள் செனகல் அணி மீண்டும் கோல் அடித்து ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. ஃப்ரீ கிக் வாய்ப்பில் தடுப்பாட்டக்காரர் கலிடோ கோல் அடித்தார்.

இறுதியாக 2க்கு 1 என்ற கோல் கணக்கில் செனகல் அணி வெற்றி பெற்று குரூப் ஏ பிரிவில் இருந்து இரண்டாவது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - வேல்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இரண்டாம் பாதியின் 50வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் ஃப்ரீ கிக் வாய்ப்பில் கோல் அடித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து வேல்ஸ் வீரர்கள் மீள்வதற்குள் 51வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி மீண்டும் கோல் அடித்தது. ஹாரி கேன் கிராஸ் செய்த பந்தை ஃபில் போடன் வலைக்குள் செலுத்தினார்.

68வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் ஆட்டத்தில் தனது இரண்டாவது கோல்-ஐ அடித்தார். இறுதியில் 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று குரூப் பி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா - ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஸெர்ஜினோ தட்டிக் கொடுத்த பந்தை சக வீரர் கிறிஸ்டியன் புளிசிக் சாதுர்யமாக கோல் வலைக்குள் செலுத்தினார்.

இறுதிவரை முயன்றும் ஈரான் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்று , குரூப் பி பிரிவில் 5 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது.

தவற விடாதீர்: கத்தார் உலகக்கோப்பை: விறுவிறுப்பான வெற்றி... அடுத்த சுற்றில் பிரேசில்-போர்ச்சுகல் அணிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com