டி20 உலகக் கோப்பை: அழுத்தமான போட்டி என்றாலே Chokers தான்”- வெளியேறியது தென்னாப்பிரிக்கா
உலகக்கோப்பை போட்டிகளில் நாக்அவுட் போட்டி என்றாலே எப்போதும் சொதப்பும் தென்னாப்பிரிக்க அணியின் சாபம், இந்த டி20 உலகக்கோப்பையிலும் தொடர்ந்திருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணியை வெளியேற்றியுள்ளது நெதர்லாந்து அணி.
எப்போதும் இல்லாத அளவிற்கு பெரிய அணிகளை எல்லாம் அதிகளவில் சிறிய அணிகள் இந்த உலகக்கோப்பையில் ஆட்டம் காட்டியுள்ளன. தகுதிச்சுற்றில் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் இலங்கை அணிகள், சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து என தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணியையும் மிரட்டி உள்ளது சிறிய அணியான நெதர்லாந்து அணி. சூப்பர் 12 போட்டியின் கடைசி போட்டியான இன்றைய போட்டியில் கட்டாயம் வென்று உலகக்கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைய வேண்டிய இடத்தில் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த நெதர்லாந்து அணியின் ஓபனர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் சீரான இடைவெளியில் நெதர்லாந்து அணி விக்கெட்டை இழந்தாலும் அடுத்தடுத்து வந்த பேட்டர்களும் அதிரடியை வெளிப்படுத்த 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் சேர்த்தது நெதர்லாந்து அணி. சிறப்பாக விளையாடிய கூப்பர் மற்றும் அக்கெர்மேன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 மற்றும் 41 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்த போட்டியை எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பேட்டிங் செய்ய வந்த தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்துலயே ஒபனர்கள் டி காக் மற்றும் பவுமா விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிலீ ரோஷோவ் விக்கெட்டை வீழ்த்தினார் ப்ரெண்டன் க்லோவர். பின்னர் கைக்கோர்த்த மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அழுத்தமான சூழ்நிலையில் சோபிக்காத மார்க்ரம் அடுத்து அவுட்டாகி வெளியேற, பின்னர் ஒரே ஓவரில் அதிரடி பேட்டர் மில்லர் மற்றும் டெய்ல் எண்டர் பர்னெல் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி போட்டியை நெதர்லாந்து பக்கம் திருப்பினார் நெதர்லாந்து பவுலர் ப்ராண்டன் க்லோவர். பின்னர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நெதர்லாந்து தென்னாப்பிரிக்க அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணி கடைசி போட்டியை விளையாடாமலே அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 4 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்லும் கதவு திறக்கப்பட்டுள்ளது.