”பிரக்ஞானந்தா, இளவேனில், சரத் கமல்”.. விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு

”பிரக்ஞானந்தா, இளவேனில், சரத் கமல்”.. விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு
”பிரக்ஞானந்தா, இளவேனில், சரத் கமல்”.. விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் இருவருக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் அசாந்தா-வுக்கு மேஜர் தயான் சந்த் விருது வழங்கப்படவுள்ளது.

மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், விளையாட்டுத் துறையில் சிறந்த வீரர்களுக்கான தேசிய விருதுகளை இன்று அறிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரருக்கு "மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா விருது", சிறந்த செயல் திறனுக்கான "அர்ஜுனா விருது", சிறந்த பயிற்சியாளர்களுக்கான "துரோணாச்சார்யா விருது" , வாழ்நாள் சாதனைக்கான "தயான் சந்த் விருது" ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான “மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது” பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் அசாந்தா-வுக்கு வழங்கப்படவுள்ளது. இதேபோல் அர்ஜுனா விருது 25 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகிய இருவரும் அர்ஜுனா விருதை பெறவுள்ளனர்.

அதேபோல தடகள வீராங்கனை சீமா புனியா, பேட்மிட்டன் வீரர் லக்ஷயா சென், பாரா பேட்மிட்டன் வீராங்கனை மானசி உள்ளிட்டோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பயிற்சியாளர்களுக்கான "துரோணாச்சார்யா விருது" வழக்கமான முறையில் 4 பயிற்சியாளர்களுக்கும், வாழ்நாள் பிரிவில் 3 பேர் என மொத்த 7 பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், வாழ்நாள் சாதனைக்கான "தயான் சந்த் விருது" 4 பேருக்கும், ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சஹான் புருஸ்கார் விருது 3 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டில் சிறந்து விளங்கிய கல்லூரிக்கு "மௌலானா அபுல் கலாம் அசாத்" விருது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரை சேர்ந்த குருநானக் தேவ் பல்கலைக்கழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் நவம்பர் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com