நம்ப முடியாத டர்னால் புஜாரா ஸ்டம்பை தகர்த்த லயன்.. வார்னேவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை!

நம்ப முடியாத டர்னால் புஜாரா ஸ்டம்பை தகர்த்த லயன்.. வார்னேவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை!
நம்ப முடியாத டர்னால் புஜாரா ஸ்டம்பை தகர்த்த லயன்.. வார்னேவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், தன்னுடைய சுழற் பந்துவீச்சால் இந்திய அணியின் பேட்ஸ் மேன்களை மிரட்டியிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியானது, இன்று மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹால்கர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வெற்றி பெற்று இந்தியா முன்னிலையில் இருந்து வரும் நிலையில், அடுத்த 2 போட்டிகளில் மீண்டு வந்து தொடரை சமன் வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் கண்டு விளையாடி வருகிறது.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்-ல் பேட்டிங்கை தேர்வு செய்த ரோகித் சர்மா!

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது பேசிய அவர், ”நாங்கள் முதல் இரண்டு போட்டிகளில் சென்றதை போலவே செல்ல நினைக்கிறோம். ஆடுகளமானது கொஞ்சம் வறட்சியாக காட்சியளிக்கிறது. நாங்கள் இங்கு நிறைய போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இது ஒரு வித்தியாசமான ஆடுகளம். இங்கு நீங்கள் எப்போதும் போட்டியில் விழிப்புடன் இருந்துகொண்டே இருக்க வேண்டும். நாங்கள் எங்கள் வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.” என்று கூறி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சொந்த முடிவால் தடுமாறி வரும் இந்திய அணி!

போட்டியின் தொடக்கத்தில் வறட்சியாக இருப்பதை பயன்படுத்திகொள்ள நினைத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில், அடித்து ஆடி எவ்வளவு ரன்களை எடுத்துக்கொள்ள முடியுமோ அப்படி ஆடினார்கள். வேகப்பந்துவீச்சுக்கு எந்த உதவியும் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், போட்டியின் 6வது ஓவரிலேயே சுழற்பந்துவீச்சை கொண்டுவந்தார்.

அதற்கு பிறகு ஆட்டமானது முழுக்க முழுக்க சுழற்பந்துவீச்சுக்கு தகுந்தவாறு மாறியது. ஸ்பின் வீசப்பட்ட முதல் ஓவரிலேயே ஆடுவதற்கு தடுமாறிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இறங்கி வந்து அடிக்க முயன்று அவுட்டாகி வெளியேறினார். அதற்கு பின்னர் சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் செய்து காட்டியதெல்லாம் மேஜிக் என்றே சொல்லலாம்.

இந்திய பேட்ஸ் மேன்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு விளையாட முடியாமல் தடுமாற, குனேமன் மற்றும் நாதன் லயன் இருவரும் மாறி மாறி விக்கெட்டுகளை அள்ள, 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா விளையாடியது.

அற்புதமான டர்னிங்கால் புஜாராவின் ஸ்டம்பை தகர்த்த நாதன் லயன்!

9வது ஓவரை நாதன் லயன் வீச, ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட இந்தியாவின் சிறந்த தடுப்பாட்ட வீரரான ஜடேஸ்வர் புஜாரா, என்ன நடக்கிறது என்பதே புரியாமல் போல்டாகி வெளியேறியது, போட்டியில் சுழற்பந்துவீச்சு சாதகமாக ஆடுகளம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை கண்முன் காட்டியது.

ஒரு சாதாரணமான ஆடுகளமாக இருந்திருந்தால், அந்த பந்தை புஜாரா பவுண்டரிக்கு அனுப்பியிருப்பார். மற்ற ஆடுகளங்களில் உள்ள டர்னிற்கு தகுந்தார்போல், லெந்த் பால் டெலிவரியை பேக் ஃபுட்டில் சென்று விளையாடினார் புஜாரா.

ஆனால் அந்த பந்தானது அவர் எதிர்பார்த்ததை விட அதிகளவு டர்ன் ஆனதால், அதை எதிர்கொள்ள முடியாத புஜாரா, நிலைக்குலைந்தார். அவரை பீட் செய்த அந்த பந்து, நேராக சென்று மிடில் ஸ்டம்புகளை தாக்கியது. ஒரு அபாரமான டர்ன் பந்தால் விக்கெட்டை இழந்த புஜாரா விரக்தியில் வெளியேறினார்.

ஆசியாவில் முதல் பந்துவீச்சாளராக புதிய மைல்கல் சாதனை படைத்த நாதன் லயன்!

இந்தியாவிற்கு எதிரான இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் நாதன் லயன், இதுவரை ஆசியாவிற்கு வந்து விளையாடிய வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி, ஆசியாவில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெரிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

ஆசியாவில் 129 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கும் நாதன், இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்ன் 127 விக்கெட்டுகள், டேனியல் வெட்டோரி 98 விக்கெட்டுகள், டெய்ல் ஸ்டெய்ன் 92 விக்கெட்டுகள், ஜேமி ஆண்டர்சன் 82 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com