தெறிக்கவிடப்பட்ட ஸ்டம்புகள்! முதல் பந்திலேயே ருதுராஜை க்ளீன் போல்டாக்கிய நடராஜன்!

தெறிக்கவிடப்பட்ட ஸ்டம்புகள்! முதல் பந்திலேயே ருதுராஜை க்ளீன் போல்டாக்கிய நடராஜன்!
தெறிக்கவிடப்பட்ட ஸ்டம்புகள்! முதல் பந்திலேயே ருதுராஜை க்ளீன் போல்டாக்கிய நடராஜன்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை தனது முதல் பந்திலேயே க்ளீன் போல்டாக்கி வெளியேற்றி தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நடராஜன் அசத்தியுள்ளார். மற்றொரு ஓப்பனர் உத்தப்பாவை வெளியேற்றி தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அசத்தல்.

ஐபிஎல் 2022 தொடரில் இதுவரை 16 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 17-வது ஆட்டத்தில், சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், முதல் வெற்றியை பதிவுசெய்யும் நோக்கில் களமிறங்குகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், உத்தப்பா ஆகியோர் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் ஓவரில் பவுண்டரியுடன் ரன் கணக்கை துவங்கிய சென்னை அணி நிதானமாக விளையாடத் துவங்கியது.

3 ஓவர்களில் 25 ரன்கள் குவித்த இந்த ஜோடியை தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டர் சுந்தர் பிரித்தார். தனது முதல் பந்திலேயே உத்தப்பாவை வெளியேற்றி அசத்தினார் சுந்தர். அடுத்ததாக மொயின் அலியுடன் நிதானமாக விளையாடினார் ருதுராஜ். ஆனால் அதற்கு தடைக்கல்லாக பந்தை வீசினார் நடராஜன். புயல் வேகத்தில் ஒரு சரியான இன்ஸ்விங்கர்! ருதுராஜ் கெய்க்வாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து மிஸ் ஆகி மிடில் ஸ்டம்பை நோக்கிப் பயணித்து க்ளீன் போல்டாக்கியது. வலதுபுறம் மற்றும் நடுத்தர ஸ்டம்ப் இரண்டையும் தாக்கியது நடராஜன் வீசிய பந்து.

இரட்டை இலக்க ரன்களை இந்த சீசனில் முதன்முறையாக எட்டியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். 13 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள் விளாசி வெறும் 16 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார் ருதுராஜ். முன்பு விளையாடிய மூன்று ஆட்டங்களில் ருதுராஜ் எடுத்த ரன்கள் 0,1,1. மொத்தமாக அவரது இந்த சீசன் சராசரி வெறும் 4.5 மட்டுமே. இந்த ஆட்டத்திலாவது தனது பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவர்பிளே முடிவதற்குள் பெவிலியன் திரும்பி விட்டார் ருதுராஜ். சென்னையின் 2 ஓப்பனர்களையும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் வெளியேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 15.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து சென்னை அணி விளையாடி வருகிறது.

அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தோனியும் ஜடேஜாவும் தற்போது களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com