நடராஜன், விராட் கோலி... "ஆளுக்கு தகுந்த மாதிரி பிசிசிஐ விதி!" - கொந்தளித்த கவாஸ்கர்

நடராஜன், விராட் கோலி... "ஆளுக்கு தகுந்த மாதிரி பிசிசிஐ விதி!" - கொந்தளித்த கவாஸ்கர்
நடராஜன், விராட் கோலி... "ஆளுக்கு தகுந்த மாதிரி பிசிசிஐ விதி!" - கொந்தளித்த கவாஸ்கர்

நடராஜன், விராட் கோலி விஷயங்களை மேற்கோள்காட்டி, ஆளுக்குத் தகுந்த மாதிரி பிசிசிஐ விதி இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கொந்தளிப்புடன் கருத்து பதிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாறு காணாத மோசமான தோல்வியை பதிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் 244 ரன்களை குவிந்திருந்த இந்தியா, அடுத்த இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதில் கடைசி நேரத்தில் பேட்டிங்கின்போது ஷமிக்கு காயம் ஏற்பட, டிக்ளர் கொடுத்தது இந்திய அணி.

இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எளிதான இலக்கை எட்டி, தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. 1974-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 42 ரன்களை எடுத்து இந்தியா படுதோல்வியடைந்தது. வரலாற்றில் மோசமான ரன்களை இந்திய அணி எடுத்த ஆண்டாக 1974 பதிவாகியிருந்த நிலையில், 46 ஆண்டுகளுக்குப் பின், அதைவிட குறைவான ரன்களை எடுத்து வரலாற்றை மாற்றியிருக்கிறது இந்திய அணி.

இந்நிலையில், 'ஸ்போர்ட் ஸ்டார்' பத்திரிகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் நடராஜனை பாராட்டியுள்ள அவர், விராட் கோலியை சாடியுள்ளார். "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் சிறப்பான ஓர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா தனது ஆட்ட நாயகன் விருதைக்கூட அவருடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவரது யார்க்கர் பந்து வீச்சு இருந்தது.

ஐ.பி.எல் ப்ளே ஆஃப் சுற்றுகளின்போது, நடராஜன் தந்தையானார். ஐபிஎல் போட்டிகள் நடந்த யுஏஇ-லிருந்து அவர் இந்தியா திரும்பாமல், அப்படியே ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். அந்த அளவுக்கு தன்னுடயை அர்ப்பணிப்பை செலுத்தினார். அதேபோல டி20 போட்டிகளில் நல்ல பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தினார். அவருடைய மிரட்டலான ஆட்டத்தைப் பார்த்து, அவரை டெஸ்ட் போட்டிகளில் இருக்கச் சொல்லி தங்கவைத்தனர். போட்டிகளில் விளையாடுவதற்கல்ல. நெட் பவுலராக இருப்பதற்கு அவர் அங்கேயே தங்கவைக்கப்பட்டார்.

கற்பனை செய்து பாருங்கள். ஒரு மேட்ச் வின்னர், இன்னொரு வகையான ஆட்டத்தில் நெட் பவுலராக இருக்கிறார். ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இந்தத் தொடர் முடிந்த பிறகு, அவர் தனது மகளை முதல்முறையாக பார்ப்பதற்கு நாடு திரும்ப இருக்கிறார். ஆனால், கேப்டனோ முதல் டெஸ்ட் போட்டி முடிந்த கையுடன், தனது முதல் குழந்தையைப் பார்க்கச் சென்றுவிட்டார். இதுதான் இந்திய கிரிக்கெட் வாரியம். ஒருத்தருக்கு ஒருவகையாகவும், மற்றொருத்தருக்கு மறுவகையான விதிகள். நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நடராஜனைக் கேட்டுப்பாருங்கள்" என்று அந்தக் கட்டுரையில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com