நாமக்கல்: வாட்டும் வறுமை! இந்திய கபடி அணிக்கு தகுதிபெறும் கனவோடு தவிக்கும் சகோதரிகள்

நாமக்கல்: வாட்டும் வறுமை! இந்திய கபடி அணிக்கு தகுதிபெறும் கனவோடு தவிக்கும் சகோதரிகள்
நாமக்கல்: வாட்டும் வறுமை! இந்திய கபடி அணிக்கு தகுதிபெறும் கனவோடு தவிக்கும் சகோதரிகள்
Published on

நாமக்கல் அருகே ரேசன் உணவை மட்டுமே நம்பி வாழும் 3 சகோதரிகள், கபடி போட்டியில் அசத்திவருகின்றனர். ‘இந்தியாவுக்காக விளையாடி சாதிப்பதற்கு தங்களுக்கு குடும்ப வறுமை தடையாகி விடுமோ’ என ஆதங்கப்படுகின்றனர் அவ்வீராங்கனைகள்.

நாமக்கல் மாவட்டம் மோகனுாரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகேசன் (வயது 52). அவரது மனைவி பொன்வள்ளி (வயது 45). இத்தம்பதியருக்கு பி.காம். இறுதி ஆண்டு படிக்கும் ஜனனி (வயது 20), பி.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு படிக்கும் சத்யா (வயது 17), 12-ம் வகுப்பு படிக்கும் கிரிசாந்தி (வயது 16) என 3 மகள்கள் உள்ளனர். இந்த 3 பேரும், கபடி போட்டியில் சாதனை படைத்து வருகின்றனர். சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில், மூவரும் நாமக்கல் மாவட்ட அணியில் பங்கேற்று, மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

இதுகுறித்து சகோதரிகள் மூவரும் நம்மிடையே பேசுகையில், “எங்க அப்பா கபடி வீரர். அவரை பார்த்து, சிறு வயது முதலே எங்களுக்கும் கபடி மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் பயிற்சியில் ஈடுபட்டோம். அதற்காக பயிற்சியாளர் தினேஷ்குமார் எங்களுக்கு உரிய பயிற்சியை அளித்தார். தொடர்ந்து ஓபன் போட்டியில் பங்கேற்று எங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்தோம். மேலும், காந்தமலை ஸ்போர்ட் சங்கம் மூலம், பல்வேறு மாவட்டங்களில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று, முதலிடம் பெற்று நிறைய பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை பெற்றுள்ளோம்.

எங்கள் லட்சியம், இந்திய அணியில் இடம் பெற்று, வெற்றிகளை பெற்று சாதனை படைக்க வேண்டும் என்பதே. என்றாலும் குடும்ப வறுமை காரணமாக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இப்போதுவரை ரேசன் உணவுப்பொருள்கள் மட்டுமேதான் எங்களுக்கு எல்லாமும். சத்துக்காக கூட, வேறு உணவுப்பொருட்களை வாங்க முடியவில்லை. ஒருவேளை எங்களுக்கு சத்தான உணவுகளும், போதிய உதவிகளும் கிடைத்தால் நிச்சயம் இன்னும்கூட எங்களால் சாதிக்க முடியும்” என்கின்றனர் சகோதரிகள்.

இவர்களின் தந்தை முருகேசன் பேசுகையில், “நான் ஒரு கபடி வீரராக இருந்தாலும், குடும்ப வறுமை காரணமாக படிப்பையும், விளையாட்டையும் கைவிட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இன்று எனது 3 மகள்களும் கபடி போட்டியில் சாதித்து வருவது மகிழ்ச்சி அளித்தாலும், குடும்ப வறுமை எனது மகள்களின் எதிர்காலத்தையும் பாதித்து விடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஏதாவது உதவி கிடைத்தால் அது தனது மகள்கள் சாதிக்க பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார் அவர்.

கபடி பயிற்சியாளர் தினேஷ்குமார் பேசுகையில், “கிராம புறங்களில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கிடைத்த அரசு வேலையை விட்டுவிட்டு, கடந்த 3 வருடங்களாக கபடி பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றோம். இதில் பயிற்சி பெற்று வரும் 3 மாணவிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நிச்சயம் இவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆண்கள் புரோ கபடி உள்ளது போல், பெண்களுக்கும் புரோ கபடி போட்டியை நடத்தினால் இன்னும் பல வீராங்கனைகள் உருவாகிடுவார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com