இந்தியா எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும்: பாக். கிரிக்கெட் வாரியம்!
இந்திய கிரிக்கெட் வாரியம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிட இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கராச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி, இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் லண்டனில் அடுத்த வாரம் கடைசி கட்ட ஆலோசனை நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ’பாகிஸ்தானுடன் 24 போட்டிகளில் விளையாட இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர கிரிக்கெட் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முன்முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும். அதைதான் இரு நாட்டு ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். இரு நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும் இதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. அதை இந்தியா விரும்பவில்லை என்றால் எங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுபற்றி விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிடுவோம்’ என்றார்.