ஆஸ்திரேலிய ஓபன்: நடால், நவோமி ஓசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் போட்டியில் ரபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் போட்டியில் நவோமி ஒசாகா ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 17-ம் நிலை வீரரான இத்தாலியின் பாபியோ போக்னினியை எதிர்கொண்டார்.
2 மணி 16 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் போக்னினியை விரட்டியடித்து 13-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாஸ்சை சந்திக்க இருந்த 10-ம் நிலை வீரரான இத்தாலியின் பெரேட்டினி முந்தைய சுற்று ஆட்டத்தின் போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் குணமடையாததால் போட்டியில் இருந்து விலகினார்.
இதனால் சிட்சிபாஸ் 4-வது சுற்றில் ஆடாமலேயே 2-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ரபெல் நடால்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள். தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மெக்டொனால்டை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் கால் பதித்தார். மெட்விடேவ் தொடர்ச்சியாக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 57-ம் நிலை வீராங்கனையான செல்பி ரோஜர்சை (அமெரிக்கா) விரட்டியடித்து தொடர்ந்து 3-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நவோமி ஒசாகா தைவான் நாட்டின் சை சூவே-யை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.