கேப்டன்சி விவகாரம்: கங்குலி- கோலிக்கு இடையே பனிப்போரா? நடந்தது என்ன?

கேப்டன்சி விவகாரம்: கங்குலி- கோலிக்கு இடையே பனிப்போரா? நடந்தது என்ன?

கேப்டன்சி விவகாரம்: கங்குலி- கோலிக்கு இடையே பனிப்போரா? நடந்தது என்ன?
Published on

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு இந்த வருடம் இன்னல் மிக்க வருடமாகவே உள்ளது. அணி நிர்வாகத்திற்கும், கோலிக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை என பலரும் வெளிப்படையாக பேசும் அளவிற்கு சலசலப்புகள் எழுந்தன.

இவ்வாறான சூழலில் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்குப் பின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கோலி அறிவித்திருந்தார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவே டி20 கேப்டன் பதவி வேண்டாம் என அறிவித்ததாக கோலி கூறியிருந்தார். அதனைத்தொடர்ந்து ஐபிஎல்லிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை துறப்பதாக கோலி அறிவித்தார். இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறியதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இருப்பினும் நியூசிலாந்துடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்தியா வெற்றிகரமாக முடித்தது. இதனைத்தொடர்ந்து அனைவரின் கவனமும் தென்னாப்ரிக்கா தொடரை நோக்கித் திரும்பியது. இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கி, புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தது பிசிசிஐ. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இரு வித WHITE BALL போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் இருப்பதே அணிக்கு உகந்ததாக இருக்கும் என பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கங்குலி VS கோலி!

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என கோலியை வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஆனால் தென்னாப்ரிக்க உடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக பேசிய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, ஒரு நாள் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்படுவது முன்னரே ஆலோசிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என யாரும் வலியுறுத்தவில்லை எனவும் கோலி கூறினார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக மெச்சத்தக்க சாதனைகளை கோலி படைத்துள்ள போதிலும் அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து பிசிசிஐ விலக்கியது ரசிகர்களுக்கு இன்று வரை ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. களத்திற்கு வெளியே நிலவும் எவ்வித சூழலும் தன் ஆட்டத்தையோ, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற வேட்கையையோ கடுகளவும் குறைத்திடாது என அழுத்தமாக தெரிவித்துள்ளார் கோலி. கேப்டன் பொறுப்பின் அழுத்தமின்றி முந்தைய ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தி கோலி மிளிர்வாரா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com