”என் நாடு நான் அழுவதை பார்க்ககூடாது”-கண்ணீரை மறைக்க 'சன்கிளாஸ்' போட்டு பேசிய ஹர்மன்ப்ரீத்

”என் நாடு நான் அழுவதை பார்க்ககூடாது”-கண்ணீரை மறைக்க 'சன்கிளாஸ்' போட்டு பேசிய ஹர்மன்ப்ரீத்
”என் நாடு நான் அழுவதை பார்க்ககூடாது”-கண்ணீரை மறைக்க 'சன்கிளாஸ்' போட்டு பேசிய ஹர்மன்ப்ரீத்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்த நிலையில், போட்டிக்கு பிறகுபேசிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத், அழுகையை மறைக்க கண்ணாடி அணிந்து வந்து பேசினார்.

நான் அப்படி ரன் அவுட் ஆகி இருக்க கூடாது. நான் ரன் அவுட்டாகிய விதம், அதை விட துரதிஷ்டவசமான ஒன்றை என் வாழ்வில் நான் உணர்ந்ததில்லை” என நா தழுதழுத்த படி பேசுவதற்கு வார்த்தை இல்லாமல் பேசினார் ஹர்மன்ப்ரீத்.

2010 அரையிறுதி, 2020 இறுதிப்போட்டி, மீண்டும் 2023 அரையிறுதியில் தோல்வி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மோதலானது ஆண்களுக்கான கிரிக்கெட் அணியை தாண்டி, பெண்களுக்கான கிரிக்கெட் அணியிலும் கடுமையான மோதலாகவே காலம்காலமாக தொடர்ந்து வருகிறது. எப்படி இந்திய ஆடவர் அணி அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியுற்று வெளியேறியதோ, அதே போன்றே இந்திய மகளிர் அணியும், டி20 உலகக்கோப்பை நாக் அவுட் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக படுதோல்விகளை சந்தித்திருக்கிறது.

2010ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பேட்டிங் பவுலிங் பீல்டிங் என அனைத்திலும் டாமினேட் செய்து அபாரமான வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணி. மேலும் மீண்டும் ஒருமுறையாக, 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதின. அப்போதும் பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் குவித்தது. 185 ரன்களை துறத்திய இந்திய அணி 99 ரன்களில் சுருண்டு 85 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தான் தற்போதைய 2023ஆம் ஆண்டும் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், மீண்டும் ஒரு நாக் அவுட் சுற்றில் பலப்பரீட்சை நடத்தின. இந்தமுறை இந்திய அணியானது பேட்டிங் பவுலிங் என இரண்டிலும், ஆஸ்திரேலிய அணிக்கு சமபலத்துடன் களமிறங்கியது. இந்த அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிவரை போராடிய இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்த ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்!

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துறத்திய அணி, பவர்பிளேவின் 4 ஓவர்களிலேயே ஷபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, யஸ்திகா பாட்டியா என டாப் ஆர்டர் பேட்டர்கள் 3 பேரின் விக்கெட்டையும் இழந்து தடுமாறியது. பின்னர் அணியை சரிவிலிருந்து மீட்க போராடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவரும், விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரன் ரேட்டை 9+லேயே வைத்திருந்த இந்த ஜோடி, இலக்கை துறத்துவதற்கான ரன்களை வேகமாக சேர்ப்பதில் தீவிரம் காட்டியது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ், 24 பந்துகளில் 6 பவுண்டரிகளை விளாசி 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

5ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஹர்மன் ப்ரீத் மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் வெற்றியை எட்டும் நிலையிலேயே ரன்களை வைத்திருந்தனர். ஆனால் போட்டியின் போக்கை தலைகீழாக மாற்றும் நிகழ்வானது 15ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் நிகழ்ந்தேறியது. 4ஆவது பந்தை எதிர்கொண்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் லாங்கானிற்கு பந்தை விரட்டி 2 ரன்களுக்கு சென்றார். அந்த ரன்னானது நிச்சயமாக 2 ரன்னிற்கு முழுமையாக ஓடக்கூடிய ரன்னாகதான் இருந்தது. ஆனால் இறுதியில் ரன்னப் லைனிற்கு பேட்டை எடுத்து செல்லும் போது, பேட்டானது தரையில் குத்தி நிலத்திலேயே நின்றதால், யாரும் எதிர்பாராத விதமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதற்கு பிறகு போட்டியில் மற்றவீரர்கள் என்ன தான் போராடினாலும், ஆஸ்திரேலியாவிடமிருந்து வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இந்திய அணி.

தோல்விக்கு பிறகு டிரெண்டான தோனி ரன் அவுட் மற்றும் ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்!

நம்பர் 7 ஜெர்சி நம்பருடன் இருக்கும் இரண்டு பேரின் செமி பைனல் ரன் அவுட்டானது, இந்திய ரசிகர்களை கொஞ்சம் கலக்க நிலைக்கு கொண்டு சென்றது என்றால் மறுக்கவே முடியாது. 2019ஆம் வருடம் ஆடவர் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில், நம்பர் 7 ஜெர்சி வீரரான எம் எஸ் தோனி, ரன் அவுட்டாகி வெளியேறி இந்திய அணி தோல்வியை சந்தித்ததை போலவே, தற்போதும் நம்பர் 7 ஜெர்சி வீரரான ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்டாகி இந்தியா அரையிறுதியில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இருவரது ரன் அவுட் புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகின.

5 வருடங்களாக ரன் அவுட்டே ஆகாத ஹர்மன்ப்ரீத்!

அப்போதைய தோனி ரன் அவுட்டும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், தற்போதைய ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்டும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் இருவரும் விக்கெட்டுகளில் சிறந்த ரன்னராக இருந்துள்ளார்கள் என்பது தான் உண்மையாக இருந்திருக்கிறது. எம் எஸ் தோனி ரன் அவுட்களில் அவுட்டாகி வெளியேறியது என்பது அரிதாகவே இருந்துள்ளது. 538 போட்டிகளில் விளையாடி இருக்கும் தோனி 24 முறை மட்டுமே ரன் அவுட்டில் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.

அதேபோல தான் ஹர்மன்ப்ரீத்தும் ரன் அவுட்டாகி வெளியேறி இருப்பது அரிதாகவே நிகழ்ந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு டி20 போட்டியில் ரன் அவுட்டாகி இருந்த ஹர்மன்ப்ரீத், 5 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் ரன் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். விக்கெடுக்கள் இடையெ 2 ரன்கள் முழுமையாகவே இருந்தது. ஆனால் அதிர்ஷ்டமின்மை என்பது 2019ல் ஆடவர் இந்திய அணியை துறத்தியது போலவே, 2023லும் மகளிர் அணியை துறத்தியுள்ளது. ஹர்மன்ப்ரீத் கிட்டத்தட்ட 1727 நாட்களுக்கு பிறகு ஒரு ரன் அவுட்டை சந்தித்திருக்கிறார். அதுவும் அவரது வாழ்க்கையில் ஒரு மோசமான ரன் அவுட்டாக மாறியுள்ளது.

என் நாடு நான் அழுவதை பார்க்க கூடாது!-ஹர்மன்ப்ரீத்

அரையிறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு பேசிய ஹர்மன் ப்ரீத் கண்ணிற்கு சன் கிளாஸ் அணிந்து வந்து பேசினார். அப்போது எதற்காக கண்ணாடி அணிந்து வந்து பேசுகிறீர்கள் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் அழுவதை என் நாடு பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை, அதனால் தான் இந்த கண்ணாடியை அணிந்துள்ளேன். நான் உறுதியளிக்கிறேன், நாங்கள் இனிவரும் போட்டியில் எங்களை மேம்படுத்துவோம், இதற்குமேலும் இன்னொரு போட்டியில் எங்கள் தேசத்தை இதுபோல் கைவிட மாட்டோம்” என உணர்ச்சி பெருக்கில் பேசினார்.

மேலும் ஏன் அழுதீர்கள் என கேட்கப்பட்டதற்கு பேசிய அவர், “நான் ரன் அவுட் ஆன விதம், அதை விட துரதிர்ஷ்டவசமான ஒன்றை என் வாழ்நாளில் நான் உணர்ந்ததில்லை. நான் அப்படி அவுட்டாகி இருக்க கூடாது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த பிறகு நானும் ஜெமியும் முழுமையாக போட்டியை எடுத்துவந்துவிட்டோம். ஆனால் அதற்கு பிறகு எங்கள் கையில் இருந்து இப்படி நழுவி போனதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.

மேலும் தோல்விகுறித்து பேசிய அவர், “நாங்கள் மீண்டும் சில எளிதான கேட்ச்களை விட்டுக் கொடுத்தோம். நீங்கள் அரையிறுதி போன்ற போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்களுடைய ஒவ்வொரு வாய்ப்புகளையும் நீங்கள் கையில் எடுக்க வேண்டும். இந்த தவறுகளிலிருந்து நீங்கள் இனி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைதவிர்த்து போட்டியில் முயற்சி என்பது முக்கியமான ஒன்று. நாங்கள் கடைசி பந்துவரை போராட நினைத்தோம், போட்டியின் கடைசி பந்துவரை சென்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com