"என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
"என் மகனின் முதல் விமானப் பயணம்" என ஹர்திக் பாண்ட்யா தனது மகன் அகஸ்தியாவுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன் பின்பு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் பிப்ரவரி 5 - 9 ஆம் தேதி வரையிலும், இரண்டாவதுப் போட்டி பிப்ரவரி 13 - 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் கடைசி இரு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக ரோகித் சர்மா, ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஏற்கெனவே சென்னை வந்தனர். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நேற்று சென்னை வந்தனர்.
இரு அணி வீரர்களுக்கும் கொரோனா தடுப்பு காரணமாக ஹோட்டல் அறைகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்வார்கள். இந்நிலையில் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்று சென்னை வந்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாண்ட்யா "எனது மகனின் முதல் விமானப் பயணம்" என தெரிவித்து அழகான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.