இலங்கை கிரிக்கெட் அணி 373 ரன்: முரளி விஜய் அவுட்
இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, டெல்லியில் நடந்துவருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து ஆடிய இலங்கை அணியில், ஏஞ்சலோ மேத்யூசும், சண்டிமாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். மேத்யூஸ் 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்திருந்தது. சண்டிமால் 147 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 164 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சண்டிமாலின் விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இலங்கை முதல் இன்னிங்ஸில் 373 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், வேகமாக ரன் எடுக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அவர் 9 ரன்கள் எடுத்திருந்தார். தவானும் ரஹானேவும் ஆடிவருகின்றனர்.