‘புதிய வாய்ப்புகளை தேடிப் போகிறேன்’ - உருக்கமான பதிவுடன் ஓய்வை அறிவித்த முரளி விஜய்

‘புதிய வாய்ப்புகளை தேடிப் போகிறேன்’ - உருக்கமான பதிவுடன் ஓய்வை அறிவித்த முரளி விஜய்
‘புதிய வாய்ப்புகளை தேடிப் போகிறேன்’ - உருக்கமான பதிவுடன் ஓய்வை அறிவித்த முரளி விஜய்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான முரளி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தமிழக வீரரும், வலது கை பேட்ஸ்மேனுமான முரளி விஜய், கடந்த 2008-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடி வந்த முரளி விஜய், 61 டெஸ்ட் போட்டிகளில் 3,982 ரன்களும், 17 ஒருநாள் போட்டிகளில் 339 ரன்களும், 9 டி20 போட்டிகளில் 169 ரன்களும், 106 ஐபிஎல் போட்டிகளில் 2,619 ரன்கள் எடுத்து விளையாடி உள்ளார்.

38 வயதான முரளி விஜய், கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின்னர் ரஞ்சிக்கோப்பையில் கவனம் செலுத்திய முரளி விஜய், கடைசியாக 2019-ம் ஆண்டில் தமிழ்நாடு அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2020-ம் ஆண்டிலும் விளையாடினார்.

அதன்பிறகு தொழில்முறை கிரிக்கெட்டில் பங்கேற்காத நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரிக்கெட் மற்றும் அதனை சார்ந்து உள்ள தொழில்களில் உள்ள வாய்ப்புகளை கண்டறிய போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் அவர் பங்கேற்க உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ), சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் செம்ப்ளாஸ்ட் சன்மார் தனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் முரளி விஜய், பி.சி.சி.ஐ.-யை நம்பி சோர்ந்துவிட்டதாக தெரிவித்திருந்த குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com