கரிபியன் லீக் தொடர்: 3-வது முறையாக கோப்பையை வென்றது பிராவோ அணி!

கரிபியன் லீக் தொடர்: 3-வது முறையாக கோப்பையை வென்றது பிராவோ அணி!
கரிபியன் லீக் தொடர்: 3-வது முறையாக கோப்பையை வென்றது பிராவோ அணி!

வெஸ்ட் இண்டீஸில் நடந்த கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் டிவைன் பிராவோவின் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்தியாவின் ஐபிஎல் போல, வெஸ்ட் இண்டீசில் கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான தொடர் கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்லா வாஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ், செயின்ட் லூசியா ஸ்டார்ஸ், பார்படோஸ் டிரிடென்ட்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.

லீக் மற்றும் பிளே-ஆப் சுற்றுகள் முடிவில் கயானா அமேசான் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டி டிரினாடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற டிவைன் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி கயானா அமேசான் வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் லூக் ரோஞ்சி 35 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். 

டிரின்பாகோ சார்பில் காரி பியர் 3 விக்கெட்டும் டிவைன் பிராவோ 2 விக்கெட்டும் சுனில் நரேன், பவத் அகமத், அலிகான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய டிரின்பாகோ அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் காலின் முன்றோ 39 பந்துகளில் 68 ரன்களும் பிரெண்டன் மெக்குலம் 24 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். 
இதன் மூலம் தொடர்ந்து இரண்டு முறை டிரின்பாகோ அணி கோப்பையை கைப்பற்றிய பெருமையை பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை மூன்றுமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com