ஐபிஎல் ஃபைனல்: சென்டிமென்டில் புனே, மிரட்டலில் மும்பை!
ஐபிஎல் இறுதி போட்டி இன்று இரவு நடக்கிறது. இதில் மும்பை-புனே அணிகள் மோதுகின்றன.
புனே அணி கடந்த ஆண்டு 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் அணி நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்கிவிட்டு, ஸ்டீவன் சுமித்தை கேப்டனாக நியமித்தது. இதையடுத்து முதல் 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற புனே, பிறகு நிமிர்ந்தது. அந்த அணியின் கூட்டு முயற்சி, ஃபைனல் வரை வந்ததற்கு சாட்சி.
கேப்டன் பதவி இல்லாமல் களம் கண்ட டோனி, கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் முத்திரை பதித்துள்ளார். அவரது அனுபவமும், ஆலோசனைகளும் புனே அணிக்கு உதவியாக இருக்கிறது. ஸ்மித், திரிபாதி, ரஹானே ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்கள். பந்து வீச்சில் உனட்கட், கிறிஸ்டியன், சென்னையின் வாஷிங்டன் சுந்தர் கைகொடுக்கிறார்கள். மும்பை அணியை லீக் சுற்றில் இரண்டு முறையும், பிளே-ஆப்பில் ஒரு முறையும் வீழ்த்தி இருப்பதால் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறது புனே.
மும்பை அணி 3-வது முறை கோப்பையை வெல்ல களமிறங்குகிறது. அந்த அணியின் பார்த்திவ் பட்டேல்,
பொல்லார்ட், கேப்டன் ரோகித் சர்மா, பாண்ட்யா சகோதரர்கள், பந்துவீச்சில் பும்ரா, கரண் சர்மா ஆகியோர் மிரட்டுவதால் மும்பையும் அதிக நம்பிக்கையில் இருக்கிறது. இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதற்கிடையே இன்னொரு சென்டிமென்டும் இருக்கிறது. கடந்த ஐந்து இறுதிபோட்டிகளில், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த அணியே பைனலில் வெற்றிப்பெற்றிருக்கின்றன. அதனால் இந்த முறையும், இரண்டாம் இடம் பிடித்துள்ள புனே அணியே கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐபிஎல் போட்டியில் இன்று 7 வது முறையாக (சென்னை 6, புனே 1) ஃபைனலில் களமிறங்குகிறார் டோனி. இந்த சாதனையை பெற்ற ஒரே வீரர் டோனி மட்டுமே!