மும்பையிடம் தோற்றது சென்னை - விரக்தி அடைந்த ரசிகர்கள்

மும்பையிடம் தோற்றது சென்னை - விரக்தி அடைந்த ரசிகர்கள்

மும்பையிடம் தோற்றது சென்னை - விரக்தி அடைந்த ரசிகர்கள்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லும் முதல் தகுதிச் சுற்றுப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதுவே சென்னை ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இருந்தாலும் கேப்டன் கூல் முடிவெடுத்தால் சரியாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அது முற்றிலும் தவறாக போய்விட்டது. போட்டியின் தொடக்கத்திலேயே சென்னை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக டு பிளசிஸ் 6 (11), ஷேன் வாட்சன் 10 (13) மற்றும் ரெய்னா 5 (7) என சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த முரளி விஜய் மற்றும் அம்பத்தி ராயுடு அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். பின்னர் முரளி விஜய் 26 (26) ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்து விளையாடி தோனி மற்றும் அம்பத்தி ராயுடு இறுதிவரை விளையாடி அணியின் ஸ்கோரை 131 ரன்களில் முடித்தனர். தோனி 29 பந்துகளில் 37 ரன்களும், ராயுடு 37 பந்துகளில் 42 ரன்களும் எடுத்திருந்தார்.

இதையடுத்து 132 என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் ஷர்மா 4 (2) ரன்களிலும், டி காக் 8 (12) ரன்களிலும் வெளியேறினர். இதனால் உற்சாகம் அடைந்த சென்னை ரசிகர்களை, அடுத்ததாக ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் சளிப்படைய செய்தனர். இஷான் கிஷான் 28 (31) ரன்கள் எடுத்திருந்த நிலையில் இம்ரான் தஹிர் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே குருனல் பாண்ட்யா அவுட் ஆகினார். 

இதனால் சென்னை ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. ஆனால் அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவின் கேட்சை வாட்சன் தவறவிட்டார். இது சென்னை உண்மையிலேயே பெரும் சொதப்பல் தான். இதையடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய சூர்ய குமார் 54 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 18.3 ஓவர்களில் மும்பை 132 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. சூர்யகுமாருடன் களத்தில் இருந்த ஹர்திக் பாண்ட்யா 13 (11) ரன்கள் சேர்த்திருந்தார். சென்னையின் தோல்வியால் போட்டியை காண அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com