\
சொதப்பிய சென்னை பேட்ஸ்மேன்கள் - மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு

சொதப்பிய சென்னை பேட்ஸ்மேன்கள் - மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு

சொதப்பிய சென்னை பேட்ஸ்மேன்கள் - மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு
Published on

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை 132 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே இன்று இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து டு பிளசிஸ் 6 (11) அதிர்ச்சி கொடுத்தார். அதைத்தொடர்ந்து இளம் வீரர் ஜெயந்த் யாதவ் வீசிய பந்தில் சுரேஷ் ரெய்னா 5 (7) ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வெளியேற, வாட்சனும் 13 (10) ரன்களில் குருனல் பாண்ட்யாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு மற்றும் முரளி விஜய் சிறிது நேரம் நிலைத்து ஆடினர். முரளி விஜய் 26 (26) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அடுத்த வந்த தோனி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனியும், ராயுடுவும் ஜெயந்த் ஜாதவ் வீசிய 14வது ஓவரில் சிக்ஸர் விளாச, சென்னையின் அதிரடி தொடங்கு என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அதன்பின்னர் இன்னமும் பொறுமையான ஆட்டம் வெளிப்பட்டது. இதனால் 17.1வது ஓவரில் தான் சென்னை அணி 100 ரன்களையே கடந்தது. 18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 107 ரன்களை மட்மே எடுத்திருந்தது. தோனி மற்றும் ராயுடு ஜோடி 35 பந்துகளில் 42 ரன்களை சேர்த்திருந்தனர். 

ஆனால் 19வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் பவுலிங்கில் 2 வான வேடிக்கைகள் காட்டினார் தோனி. இதனால் அணியின் ஸ்கோர் 19 ஓவர்களில் 122 ஆனது. அடுத்து 20 ஓவரில் பும்ரா வீசிய முதல் பந்தில் தோனியின் பேட் கை நழுவி பறந்தது. அவர் அடித்த பந்து கேட்ச் ஆனது. ஆனால் அது ‘நோ பால்’ ஆனதால், மீண்டும் தோனிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் பும்ராவின் பந்தை அடிப்பது கடினமாக இருந்தது. அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மும்பை அணியில் ராகுல் சாஹர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com