மும்பை அணியில் மூவர்தான் முக்கிய துருப்புச் சீட்டுகள்! கவாஸ்கர் கணிப்பும் அணியின் நிலையும்

மும்பை அணியில் மூவர்தான் முக்கிய துருப்புச் சீட்டுகள்! கவாஸ்கர் கணிப்பும் அணியின் நிலையும்
மும்பை அணியில் மூவர்தான் முக்கிய துருப்புச் சீட்டுகள்! கவாஸ்கர் கணிப்பும் அணியின் நிலையும்

ஐபிஎல் 2023 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய ஜோடியான டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் துருப்புச் சீட்டுகளாக இருப்பார்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பும்ரா விலகல்.. மும்பை அணிக்கு பின்னடைவா?

ஐபிஎல் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி, மே 28ஆம் தேதி நிறைவுபெற உள்ளது. இதனால், இப்போதே ஐபிஎல் சீசன் வேகம் பிடித்துள்ளது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா காயத்திலிருந்து குணமடையாததால், இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது, அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

கடந்த ஐபிஎல்லில் ப்ளே ஆஃப்-க்கு கூட போகவில்லை

5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்தாண்டு மிகவும் மோசமானதாக அமைந்தது. ப்ளே ஆஃப் சுற்றுக்குக்கூடச் செல்லாமல் வெளியேறியது. எனவே இந்த முறை நிச்சயம் கம்பேக் தர வேண்டும் என முணைப்புடன் உள்ளனர். ஆனால் மும்பை அணியின் நம்பிக்கை நட்சித்திரமாகச் செயல்பட்ட பொல்லார்ட் ஓய்வு பெற்றுவிட்டார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக விளையாடமாட்டார்.

மும்பை அணியில் இவர்கள்தான் ட்ரம்ப் கார்டு - கவாஸ்கர் கணிப்பு

இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் மாற்றாக சிறந்த வீரர்களைச் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது. இந்த நிலையில் பும்ராவிற்குப் பதில் ஆஸ்திரேலிய வீரர்களான டிம் டேவிட், கேமரூன் கிரீன், இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துருப்புச் சீட்டுகளாக இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "டிம் டேவிட், ஓரிரு ஓவர்களிலேயே ஆட்டத்தை மாற்றக்கூடியவர். அதுபோல், கேமரூன் கிரீன் பேட் மற்றும் பந்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர். அவர் 3வது வரிசையில் இறங்கிக்கூட பேட்டிங் செய்யலாம். காரணம் அப்படி இறக்கப்பட்டாலும் அவர் விரைவாக ரன்கள் எடுப்பார்.

ஆர்ச்சர் துருப்புச் சீட்டாக இருப்பார்

முக்கியமாக மும்பை அணிக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் துருப்புச் சீட்டாக இருப்பார். மும்பையின் பலமும் ஆர்ச்சர் என்று கூறலாம். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக விக்கெட்கள் எடுக்கும் திறமை அவரிடம் உள்ளது. இடையில் ரன்ரேட்டை குறைப்பதற்கும், டெத் ஓவர்களில் எதிரணியை கட்டுப்படுத்துவதற்கும் சிறப்பாக செயல்படுவார். மேலும், தென்னாப்பிரிக்காவுக்கான தொடரில் ஜோஃப்ரா சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.

மும்பை அணியின் முக்கியமான குறை இதுதான்!

ஆகையால் ஜோஃப்ரா, டேவிட் மற்றும் கிரீன் ஆகியோர் பெரிய மாற்றத்தைத் தருவார்கள். இரட்டைச் சதம் கண்ட இஷான் கிஷானும் நம்பிக்கை அளிப்பார். ஆகையால், இந்த சீசனில் சிறந்த திட்டத்துடன் கேப்டன் ரோகித் சர்மா களமிறக்குவார் என நினைக்கிறேன். மும்பை அணியின் முக்கியமான குறை என்று பார்த்தால் சுழற்பந்துவீச்சுதான். ஸ்பின் காம்பினேஷன் சரியாக அமையாததுபோன்று உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கேமரூன் கிரீன், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.17.50 கோடிக்கு வாங்கப்பட்டார் என்பதும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதில், காயம் காரணமாக கடந்த சீசனில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை.

மும்பை அணி விவரம் வருமாறு:

ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், ரமந்தீப் சிங், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ட்ரிஸன் ஸ்டப்ஸ், தேவால்ட் ப்ரேவிஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திக்கேயா, ஹ்ரித்திக் ஷாக்கீன், ஜேசன் பெஹரண்டாப், ஆகாஷ் மாத்வால், கேமரூன் க்ரீன், ஜே ரிச்சர்ட்சன், பியூஸ் சாவ்லா, டூயன் யான்சென், விஷ்ணு வினோத், சாம்ஸ் முலானி, நேஹல் வாதேரா, ராகவ் கோயல்

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com