மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் அந்த அணி 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிலும் நீடிக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பிரியம் கார்க் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரியம் கார்க் 42 ரன்களும், திரிபாதி 76 ரன்களும் சேர்க்க, அவர்களுக்கு உறுதுணையாக நிகோலஸ் பூரன் 38 ரன்கள் எடுத்தார். இதனால், 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் ரமன்தீப் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.  இருவரும் ஜோடி சேர்ந்து எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். ரோகித் சர்மா 36 பந்துகளில் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரோகித்தை தொடர்ந்து இஷான் கிஷன் 43 ரன்களில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு மும்பை அணி சரிவை நோக்கி சென்றது. ஆட்டத்தின் போக்கை மாற்றிய டிம் டேவிட் 18 பந்துகளை சந்தித்த  46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன்பின் இரண்டு ஓவர்களுக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், ஓவரை மெய்டனாக வீசியதுடன் ஒரு விக்கெட் வீழ்த்தி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி இருந்தார். இறுதி ஓவரில் 19 ரன்களுக்கு 16 ரன்கள் மட்டுமே மும்பை அணியால் சேர்க்க முடிந்தது. இதனால் 3  ரன்கள் வித்தியாசத்தில் மும்பை மீண்டும் தோல்வியை தழுவியது. உம்ரான் மாலிக் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த தொடரில் மும்பை அணி சந்திக்கும் 10வது தோல்வி இதுவாகும். அதேநேரம், தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு ஐதராபாத் அணி 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் அந்த அணி 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப்-க்கான வாய்ப்பிலும் நீடிக்கிறது. பிளே-ஆஃ ப் சுற்றுக்கு முன்னேற இன்னும் அந்த அணிக்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

இதையும் படிக்கலாம்: ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com