'சிறப்பான தரமான சம்பவங்கள இனிமேல்தான் இருக்கு’ - MI to CSK.. ரஹானேவின் மிரட்டலான IPL கேரியர்!

முன்னெப்போதும் விட இந்த வருடம் ரஹானே சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
Ajinkya Rahane
Ajinkya Rahane Twitter

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பா் கிங்ஸ் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

நடப்பு சீசனில் யாருமே எதிர்பாராத வகையில் ரஹானே சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் 5 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 29 பந்துகளில் 71 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் இருந்தாா். 244 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ரஹானே கூறும்போது, ''நான் எனது திட்டங்களில் தெளிவாக இருந்தேன். எனது விளையாட்டை அனுபவித்து விளையாடுவதே எனது முக்கியமான திட்டம். ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றினாலும், சிறிது நேரம் தாக்குப்பிடித்து விட்டால் கடினமின்றி ரன் குவிக்கலாம்.

எங்களுக்கு துவக்கம் மிக சிறப்பாக அமைந்தது. எனவே தான் நானும் அதிரடியாக விளையாடினேன். நான் விளையாடிய அனைத்து போட்டியும் எனக்கு பிடித்தமானது தான் என்றாலும், எனது சிறப்பான ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்.

MS Dhoni
MS DhoniTwitter

தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதால் பல விஷயங்களை எளிதாகக் கற்றுக் கொள்ள முடிகிறது. அவரது கேப்டன் பொறுப்பில் நான் இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளேன், இப்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறேன். அவர் சொல்வதை அப்படியே பின்பற்றினாலே போதுமானது'' என்று தெரிவித்தார்.

ரஹானேவின் மிரள வைக்கும் ஐபிஎல் கேரியர்!

ஐபிஎல் கிரிக்கெட் கேரியரை பொறுத்தவரை ரஹானே இதுவரை 163 போட்டிகளில் விளையாடி 4283 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை 2 சதம், 30 அரைசதம் விளாசியுள்ளார். 2008 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த மாநிலத்தின் அணியான மும்பை இந்தியன்ஸ்க்காக ஐபிஎல் கேரியரை தொடங்கினார். ஆனால், அங்கு அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2008 ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், 2009 ஆம் ஆண்டு 8 போட்டிகளில் விளையாடி 144 ரன்கள் எடுத்திருந்தார். 2010 ஆம் ஆண்டு விளையாடவில்லை. 2011 ஆம் ஆண்டு 10 போட்டிகளில் 120 ரன்களே எடுத்தார்.

2012 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் ஏலம் எடுக்கப்பட்டது முதலே அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அந்த வருடத்தில் 16 போட்டிகளில் விளையாடி 560 ரன்கள் குவித்தார். முதல் சதத்தையும் பதிவு செய்தார். அதேபோல், 2013 ஆம் ஆண்டு 488 ரன்களை குவித்தார். 2014ம் ஆண்டில் 339 ரன்கள் குவித்தாலும், அடுத்த ஆண்டான 2015ல் 540 ஆம் ஆண்டில் 540 ரன்கள் குவித்தார். 2016, 2017 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் அணி தடை செய்யப்பட்ட நிலையில், அந்த வருடங்களில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணிக்காக விளையாடினார். 2016 ஆம் ஆண்டு புனே அணிக்காக அவர்தான் அதிக ரன்கள் விளாசினார். 14 போட்டிகளில் 480 ரன்கள். அந்த அணியில் தோனி இருந்தது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டில் 382 ரன்கள் எடுத்திருந்தார். மீண்டும் 2018 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு திரும்பினார். அப்போது, புனே அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். 2018 ஆம் ஆண்டில் 370 ரன்களும், 2019ல் 393 ரன்களும் எடுத்தார்.

பின்னர், ராஜஸ்தான் அணியில் இருந்து டெல்லிக்கு சென்றார். டெல்லியில் அவருக்கு கடும் சரிவு தான் கிடத்தது. மிகவும் பின் தங்கிய நிலைக்கு சென்றுவிட்டார். 2021ல் 2 போட்டிகள் விளையாடி 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், 2022ல் 7 போட்டிகளில் 133 ரன்கள் எடுத்தார்.

இத்தகைய சூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார் அஜிங்கிய ரஹானே. என்னையா அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கிறீங்க என சென்னை அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் விளாசி தள்ளி வருகிறார். களத்தில் இறங்கினாலே சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசுகிறார். குறைந்த பட்சம் 30 ரன்களை உறுதி செய்துவிடுகிறார். சென்னை அணிக்காக இதுவரை 5 போட்டியில் விளையாடி 209 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு அரைசதம் அடங்கும். அதிகபட்சம் நேற்றைய போட்டியில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com