5 தோல்விகளுக்கு இடையே புது பிரச்னை: தொடர்ந்து அதே தவறை செய்யும் மும்பை இந்தியன்ஸ்

5 தோல்விகளுக்கு இடையே புது பிரச்னை: தொடர்ந்து அதே தவறை செய்யும் மும்பை இந்தியன்ஸ்
5 தோல்விகளுக்கு இடையே புது பிரச்னை: தொடர்ந்து அதே தவறை செய்யும் மும்பை இந்தியன்ஸ்

தொடர்ந்து 5 தோல்விகளை தழுவிய நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்து கொண்டதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

15-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டி, மும்பை மற்றும் புனேவில் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டநிலையில், ப்ளே ஆஃப் முன்னேற அணிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான், கொல்கத்தா, குஜராத் அணிகள் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பையும், 4 முறை கோப்பை வென்ற சென்னை அணியும், தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருந்து வந்தன. இதில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி வெற்றிபெற்று விமர்சனத்தை உடைத்தெறிந்தது. ஆனால், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், வெற்றிபெற வாய்ப்பு இருந்தும், மும்பை அணி 5-வது தோல்வியை தழுவியது.

புனேவில் உள்ள எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த 23-வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டனும், துவக்க ஆட்டக்காரருமான மயங்க் அகர்வால் (52 ரன்கள்) மற்றும் தவான் (70 ரன்கள்) நல்ல தொடக்கத்தை அளித்தனர். இதேபோல் மிடில் ஆர்டரில் விளையாடிய ஜிதேஷ் சர்மா, 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான் 3 ரன்களில் அவுட்டாக, ரோகித் சர்மா (28) மற்றும் ப்ரேவிஸ் (49) நல்ல துவக்கத்தை அளித்தாலும், நிதானமாக நிலைத்து ஆடாததால் அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்து கொண்டதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அணி வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், இதேபோல் பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்து கொண்டதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சீசனில், கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 2-வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் விதிமுறைப்படி 3-வது முறையாக, பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தால், கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும். மேலும் அவருக்கு ரூ.24 லட்சம் அபராதம் மற்றும் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com