நிறவெறியை கண்டித்து ஒலிம்பிக் பதக்கத்தை ஆற்றில் வீசியெறிந்த முஹமது அலி
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளின் லட்சியக்கனவாக இருக்கும். ஆனால் ஒலிம்பிக்கில் வாங்கிய தங்கப்பதக்கத்தை ஆற்றில் வீசியெறிந்த ஒரு வீரர் இருக்கிறார். பார்க்கலாம் அவரைப் பற்றி.
அடி 3 அங்குல உயரம். போட்டி வளையத்தில் எதிராளியின் தாடை எலும்பை பதம் பார்க்கும் இவரது குத்துகள். அவர் தான் குத்துச்சண்டை ஜாம்பவான் முஹமது அலி. 1960 -ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி. அப்போது கேசியஸ் க்ளே என்ற பெயரைக் கொண்டிருந்த முஹமது அலி, லைட் ஹெவி வெயிட் எனும் பிரிவில் கலந்து கொண்டார். 81 கிலோ எடைப்பிரிவினருக்கான இந்தப்போட்டியில், இறுதிச்சுற்றில் போலந்து வீரர் பைட்ரோவ்ஸ்கியை எதிர்த்து களமிறங்கினார். புலியாய் களத்தில் சீறிய அலி போலந்து வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தமதாக்கிறார்.
எனினும் நிறவெறிப் பாகுபாட்டால் அவர் பாதிக்கப்பட்டு வந்தார். வெற்றி வீரனாக வலம் வர வேண்டிய அவர் ஒரு போராட்டக்காரராகவே தம் இளமைக் காலத்தை கடக்க வேண்டியிருந்தது. நிறப் பாகுபாட்டால் தாம் சிறுமைப்படுத்தப்படுவதை பொறுக்காமல் இஸ்லாம் மதத்துக்கு மாறிய கேசியஸ் கிளே என்ற தமது இயற்பெயரை முஹமது அலி என மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருகாலகட்டத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தாம் அவமதிக்கப்பட்டதை கண்டு கொதித்தார். ரோமில் தாம் வாங்கிய தங்கப்பதக்கதை அமெரிக்காவில் உள்ள ஒகியோ ஆற்றில் வீசியெறிந்து தம் எதிர்ப்பை காட்டினார்.
நிறவெறிக்கு எதிரான அவரது போராட்டத்துக்கு நீண்ட காலத்துக்கு பின் அங்கீகாரம் கிடைத்தது. 1996-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியின் போது அவர் கௌரவிக்கப்பட்டனர். 1960-ல் முஹமது அலி ஆற்றில் வீசியெறிந்த தங்கப்பதக்கத்தை போன்று மாதிரி தங்கப்பதக்கத்தை அவருக்கு வழங்கி கெளரவித்தது விழா கமிட்டி.