’அவரது ஜெர்ஸியில் கண்ணீர் துளிகள் இருந்தன’ - தோனி குறித்து அஸ்வின் பகிர்ந்த நெகிழ்ச்சி கதை

’அவரது ஜெர்ஸியில் கண்ணீர் துளிகள் இருந்தன’ - தோனி குறித்து அஸ்வின் பகிர்ந்த நெகிழ்ச்சி கதை
’அவரது ஜெர்ஸியில் கண்ணீர் துளிகள் இருந்தன’ - தோனி குறித்து அஸ்வின் பகிர்ந்த நெகிழ்ச்சி கதை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த தோனி அன்று இரவு முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிந்திருந்த ஜெர்ஸியை அணிந்திருந்ததாகவும், அதில் அவரின் சில கண்ணீர் துளிகள் இருந்ததாகவும் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

அண்மையில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி அனைத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த முடிவிற்கு திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தியப் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் தோனியுடனான நெகிழ்ச்சிமிக்க தருணங்களை அவரது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும் போது “ எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் அணியை வெற்றிப் பெற செய்வதற்காக நாங்கள் இருவரும் களத்தில் போராடிக்கொண்டிருந்தோம். ஆனால் இறுதியில் அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியைத் தழுவினோம். அப்போது அவர் ஸ்டெம்பை பிடுங்கிக் கொண்டு முடிந்துவிட்டது என்று கூறி அமைதியாக நடந்தார். அவருக்கு அது மிகவும் நெகிழ்ச்சிகரமான தருணமாக இருந்தது.

மாலை வேளையில் அவருடன் நான், இஷாந்த் ஷர்மா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் இருந்தோம். அவர் போட்டிக்காக அணிந்திருந்த ஜெர்ஸியை கழட்டவே இல்லை. அன்றைய இரவு முழுவதும் அவர் அந்த ஜெர்ஸியை அணிந்திருந்தார். அதில் சில துளி கண்ணீரும் இருந்தது.

நான் அவரை சேப்பாக்கத்தில் நடந்த இந்தியா வெஸ்ட் இந்தியாவிற்கு இடையேயான போட்டியில் சந்தித்தேன். அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது இன்னும் நெருக்கமானேன். அப்போதுதான் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளமுடிந்தது. அதன் பின்னர்தான் அவர் எவ்வளவு விஷயங்களை அறிந்த ஒரு தலைவன் என்பதை கண்டறிந்தேன்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன் லீக் சுற்றில் அவரிடம் இருந்து ஒரு முக்கியமானப் பாடத்தைக் கற்றேன். நான் விக்டோரியாவிற்கு எதிராக பந்து வீசிக்கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த தோனி “ நீங்கள் நெருக்கடியான நேரத்தில் உங்களுடைய சிறந்தப் பந்தை வீச வில்லை. ஆனால் உங்களுக்கு தற்போது கேரம் பால் கிடைத்துள்ளது. ஆகவே இதை அதிகம் பயன்படுத்த முடியும்” என்றார். மேலும் நான் ஒரு புதுமையான, அதே வேளையில் மிகவும் திறமைமிக்க விளையாட்டு வீரர் எனவும் இந்தத்திறமையை நீங்கள் இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
அவரது அந்த அறிவுரை என்னை அப்படியே ஒரு கணம் நிற்க வைத்து விட்டது. அவரது அறிவுரையை நான் இன்று வரை பின்பற்றி வருகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com