“உலகக் கோப்பையில் தோனிக்கு மிகப்பெரிய ரோல்” - ரவிசாஸ்திரி
முந்தைய உலகக்கோப்பை தொடரை விட தற்போதைய தொடர் சவாலானதாக இருக்கும் என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாட கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்றிரவு லண்டன் செல்கின்றது. இந்திய அணி புறப்படுவதை முன்னிட்டு தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, ரவி சாஸ்திரி பேசுகையில், “நம்மிடம் அனுபவம் வாய்ந்த பவுலிங் யூனிட் உள்ளது. இந்த பவுலிங் யூனிட் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தங்களது திறமையை காட்டியுள்ளது. அதனையே உலகக்கோப்பையிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். முந்தைய உலகக்கோப்பை தொடரை விட தற்போதைய தொடர் சவாலானதாக இருக்கும். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் கூட தற்போது வலுவாக உள்ளன. சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம்.
உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் சரியான இடைவெளி உள்ளது. அதனால், வீரர்களுக்கு அதிக சிரமம் இருக்காது என நினைக்கிறேன். நெருக்கடியான போட்டிகளை விளையாடுவது சிறந்தது. களத்தில் நூறு சதவீதம் திறமையை வெளிப்படுத்துவோம். திருப்தி அடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடுவோம்.
உலகக்கோப்பையில் தோனிக்கு மிகப்பெரிய ரோல் உண்டு. ஒரு சின்ன விஷயம் கூட போட்டியை மாற்றி அமைக்கக் கூடும். அதனால், அவர் மதிப்புமிக்க வீரராக இருப்பார். ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் தோனியை விட சிறந்த வீரராக யாரும் இருக்க முடியாது” என்று கூறினார்.