ராணுவ வீரராகவே மாறிய தோனி - என்ன மிடுக்கான நடை..! வீடியோ
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராணுவ வீரராகவே மாறி மிடுக்கான நடை நடந்து அசத்தினார்.
இதே தேதியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தோனி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு, 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் உலகக் கோப்யை வென்றது. அதன், பின்பு 28 ஆண்டுகள் கழித்து, இரண்டாவது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. மிகவும் பரப்பாக நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் கேப்டனாக இருந்த தோனி, 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். அவர் அடித்த வின்னிங் சிக்ஸரை இன்றுவரை மறக்க முடியவில்லை.
இந்திய அணிக்கு மறக்க முடியாத இதே நாள் தோனிக்கு மற்றொரு வகையில் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. மத்திய அரசு அறிவித்த பத்ம பூஷன் விருதை தோனி இன்று குடியரசுத் தலைவர் கையில் வாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் ராணுவ சீருடையில் வருகை தந்திருந்தார். தோனிக்கு ராணுவ லெப்டினெண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொருவராக தனக்கான விருதனை குடியரசு தலைவரிடம் சென்று வாங்கி வந்தனர். தன்னுடைய நேரம் வந்த போது ஒரு ராணுவ வீரருக்கே உண்டான தோரணையில் மிடுக்காக நடந்து குடியரசு தலைவரை நோக்கி சென்றார் தோனி. அவரது நடை மிகவும் நேர்த்தியாக இருந்தது. குடியரசுத் தலைவருக்கு சல்யூட் செய்து தனது விருதினை பெற்று வந்தார். ராணுவ சீருடையில் தோனி விருது வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தோனி ஏற்கனவே 2008, 2009 ஆம் ஆண்டிற்கான ஐசிசி-க்கான ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருது, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது(2007), பத்ம ஸ்ரீ விருது(2009) ஆகியவற்றை தோனி பெற்றிருக்கிறார்.