பாகிஸ்தான் ரசிகருக்கு இலவச டிக்கெட்: தோனியை புகழும் ’சாச்சா சிகாகோ’!
பாகிஸ்தானில் பிறந்த ரசிகருக்கு தோனி, இலவசமாக டிக்கெட் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க அதிகமான ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். நாளை நடக்கும் இந்த போட்டியை நேரில் பார்க்க பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் தீவிர கிரிக்கெட் ரசிகர் முகமது பஷிர் என்ற சாச்சா சிகாகோ-வுக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, இலவசமாக டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளார். 2011 ஆம் வருட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்தே, இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க, தோனி அவருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி வருகிறார்.
இதுபற்றி முகமது பஷிர் அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க, இங்கிலாந்து வந்துள்ளேன். இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கு ரூ.80 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரம் வரை கொடுக்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். இது நான் சிகாகோ திரும்பும் விமான டிக்கெட் தொகைக்கு சமமான ஒன்று. இந்த போட்டிக்காக டிக்கெட் வாங்க நான் கஷ்டப்படவில்லை. அதற்கு காரணமான தோனிக்கு நன்றி. அவர் பிசியாக இருப்பார் என்பதால் அவரை போனில் அழைப்பது இல்லை. மெசேஜ் அனுப்பி அவருடனான எனது பழக்கத்தை தொடர்ந்து வருகிறேன். டிக்கெட் தருவதாக தோனி கூறியதாலேயே இங்கு வந்தேன். தோனி மனிதநேயம் மிக்கவர். எனக்கு இலவசமாக டிக்கெட் கிடைப்பதை அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன். இதுபோல வேறு யாரும் எனக்கு இப்படி செய்வார்களா என்று தெரியாது.
தோனிக்கு இந்த முறை ஆச்சரியமான நினைவுப்பரிசை கொண்டு வந்திருக்கிறேன். அதை பின்னர் வழங்க இருக்கிறேன். இந்திய தேசிய கொடியின் வண்ணத்தை உடலில் வரைந்தபடி வரும் இந்திய ரசிகர் சுதிரும் நானும் ஒரே அறையில் தங்க இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்கள்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.
முகமது பஷிர், பாகிஸ்தான் வீரர்களை நேற்று சந்தித்து பேசினார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர் இந்திய வீரர்களை சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.