“ சொந்த இடத்தில் ஜாம்பவான்’- வைரலாகும் தோனியின் புகைப்படம்
இந்தியா- தென் ஆப்பிரிக்கா போட்டிக்கு பின் இந்திய வீரர்களின் ஓய்வு அறைக்கு தோனி வருகை தந்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் பின் தங்கியது. இதையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற அந்த அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன்களைச் சேர்க்கத் தடுமாறியது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4-ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சில நிமிடங்களிலேயே சுழல் பந்துவீச்சாளர் நதீம், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அந்த அணி 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.
போட்டிக்கு பிறகு வீரர்கள் தங்கும் ஓய்வு அறைக்கு வந்த மகேந்திர சிங் தோனி, வீரர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். சில இளம் வீரர்களுக்கு அவர் ஆலோசனைகளையும் வழங்கினார். ஓய்வு அறைக்கு வந்த தோனியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிசிசிஐ தன் ட்விட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. தோனி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட ரவி சாஸ்திரி, அருமையான வெற்றிக்கு பின் இந்தியாவின் உண்மையான ஜாம்பவானை அவரது இடத்திலேயே பார்த்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து விராட் கோலியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த விராட், ''தோனி ஓய்வு அறையில் தான் உள்ளார். வாருங்கள். வந்து அவருக்கு ஹலோ சொல்லுங்கள்'' என தெரிவித்தார்.