’இன்று முதல் என்னை..’ ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிய தோனியின் அந்த பதிவு - ஒரு ரீவைண்ட்!

’இன்று முதல் என்னை..’ ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிய தோனியின் அந்த பதிவு - ஒரு ரீவைண்ட்!
’இன்று முதல் என்னை..’ ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிய தோனியின் அந்த பதிவு - ஒரு ரீவைண்ட்!

கோடிக்கணக்கான இதயங்களை ஒற்றை சமூக வலைத்தளப்பதிவு நொறுங்கச் செய்யுமா? ஆம்! அப்படியொரு சம்பவம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நிகழ்ந்தது. கொரோனா முதல் அலையின் பிடியில் இருந்து மெல்ல மீண்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தன. அன்று மாலை சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட இரண்டே வரிகள் கொண்ட அந்த “வரலாற்று சிறப்பு மிக்க பதிவு” கோடிக்கணக்கான இதயங்களை கலங்கடித்தது. உலகக் கோப்பைகளை நோக்கி இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை:

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மல்லுக்கட்டியது. அந்த அணி நிர்ணயித்த 240 ரன்களை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுல், ரோகித், கோலி மூவரும் வெறும் ஒரு ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா தலா 32 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டிய போதிலும் இந்திய ரசிகர்கள் மனம் தளராமல் நேரலையில் வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஏனென்றால் களத்தில் தோனி இருந்தார்!

இதயத்தை நொறுங்கச் செய்த அந்த ரன்-அவுட்:

ஜடேஜாவுடன் கூட்டணி சேர்ந்த தோனி, இலக்கை நோக்கி இந்திய அணி முன்னேறுவதை கவனத்தில் கொண்டு விளையாடத் துவங்கினார். அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து ஜடேஜா பவுண்டரி, சிக்ஸர்களாக விளாச, அவருக்கு பக்கபலமாக தடுப்பாட்டத்தை கையில் எடுத்து பொறுமையாக விளையாடினார் தோனி. சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகள் சரிந்த நிலையில் தோனியின் நிதான ஆட்டம் அப்போதைய தேவையாக இருந்தது. ஒருகட்டத்தில் ஜடேஜாவுக்கு ஸ்டிரைக் கொடுப்பதை மட்டுமே தோனி செய்து கொண்டிருந்தார். 77 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா தனது விக்கெட்டை பறிகொடுக்க மொத்த பாரமும் தோனி தலை மீது ஏறியது.

கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா வெளியேறிய பின் வீசப்பட்ட 2வது பந்தை எல்லைக் கோட்டுக்கு அப்பால் விளாசினார் தோனி. அந்த போட்டியில் தோனி விளாசிய முதல் சிக்ஸர். 70 பந்துகளை எதிர்கொண்டபின்னர் தான் தோனி இந்த சிக்ஸரை விளாசினார். மறுமுனையில் பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் இருந்த காரணத்தால் ஸ்டிரைக்கில் தோனி தொடர்ந்து நீடிக்க விரும்பி ஒரு ரன் எடுப்பதை தவிர்க்க விரும்பினார். அடித்தால் பவுண்டரி அல்லது 2 ரன்கள் என்ற மனநிலையில் அவர் இருக்க, அதற்கு எமனாக வந்தது ஒரு ரன் - அவுட்.

அதே ஓவரில் பெர்குசன் வீசிய 3வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுக்க முயன்றார். மார்டின் கப்தில் பந்தை ஸ்டம்பை நோக்கி குறிவைத்து தாக்க, தோனியின் பேட் க்ரீஸை தொடுவதற்கு சில மில்லி விநாடிகளுக்கு முன் பந்து ஸ்டம்பை தொட்டிருந்தது. இந்திய ரசிகர்கள் இதயங்கள் அப்பளமாய் நொறுங்கியது. 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார் தோனி. 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதால் இந்தியாவின் உலகக் கோப்பை கனவும் தகர்ந்தது.

16 வார்த்தைகள்! நொறுங்கிய கோடி இதயங்கள்! அந்த ஓய்வு அறிவிப்பு:

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்று விடுவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது குறித்து தோனி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மாறாக இந்திய அணிக்காக விளையாடுவதை தோனியும் தவிர்க்கத் துவங்கி இருந்தார். 2020 மார்ச்சில் கொரோனா பரவத் துவங்க கிரிக்கெட் விளையாட்டும் நின்று போனது. சில மாதங்களுக்கு பின் எல்லாம் இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்க, மைதானங்களை நோக்கி வீரர்கள் புறப்பட தயாராகி கொண்டிருக்க, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தோனி.

2020 ஆம் ஆண்டு இதே நாள் மாலை வேளையில் தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியானது. “உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. 1929 (இரவு 7.29) மணி முதல் நான் ஓய்வு பெற்று விட்டதாகக் கருதுங்கள்” என்று தலைப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார் தோனி. 5.2 கோடி முறை பார்க்கப்பட்ட அந்த வீடியோவில் “வாழ்கையில் எதுவும் நிரந்தமல்ல... எல்லாம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்” என்பதை கருவாகக் கொண்ட “மெய்ன் பல் தோ பல் கா ஷாயர் ஹூன்” என்ற தத்துவப் பாடல் இடம்பெற்று இருந்தது. 16 வார்த்தைகள் மட்டுமே அந்த பதிவு கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை ஸ்தம்பிக்க செய்தது என்பது மிகையாகாது! 

View this post on Instagram

A post shared by M S Dhoni (@mahi7781)

இன்னும் களத்தில் “தோனி என்றால் நம்பிக்கைதான்”:

சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 17,266 ரன்கள், 16 சதங்கள், 359 சிக்ஸர்கள், 634 கேட்சுகள், 195 ஸ்டம்பிங்குகள்! இவ்வளவு செய்து முடித்த நிலையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் தோனி. கிரிக்கெட் ரசிகர்கள் இதயங்களில் இடியாய் வந்திறங்கியது அந்த அறிவிப்பு. நீல நிற ஜெர்சியில் இருந்து மட்டும்தான் அவர் ஓய்வு பெற்றிருக்கிறார். மஞ்சள் நிற ஜெர்சியில், சிஎஸ்கே கேப்டனாக அவர் தொடர்வார் என்ற தகவல்கள் ரசிகர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்தது. ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் சீட்டுக்கட்டு போல விக்கெட்டை பறிகொடுத்தாலும், அதே நம்பிக்கை தற்போதும் தோனி மீது ரசிகர்களுக்கு இருக்கிறது. அவரும் அந்த நம்பிக்கையை சுகமான சுமையாக கருதி அடுத்த ஐபிஎல் சீசனிலும் களமிறங்க இருக்கிறார்.

தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் புதிய தலைமுறை இணையதளத்தில் சிறப்புக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com