"இனிமே போன் பண்ணா உடனே எடுப்பாரா தோனி?" - ஆர்.பி.சிங் 'கலகல' பேட்டி !
ஓய்வுப்பெற்ற பின்பு போன் செய்தால் உடனே எடுப்பேன் என தோனி கூறியிருந்தார், இப்போது அவர் அதுபோல செய்வாரா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்தார். இப்போது ஐக்கிய அரபு அமீரக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியினருடன் துபாய் பறந்துள்ளார் தோனி. தோனி ஓய்வுப்பெற்றதை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் நண்பரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளருமான ஆர்.பி.சிங் "கிரிக்கெட்.காம்" இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் "தோனி எப்போதுமே அமைதியான மனிதர்தான். தோனி எப்போதும் எங்களின் செல்போன் அழைப்புகளை ஏற்பதில்லை என நான் ஒருமுறை அவரிடம் குறை கூறினேன். அதற்கு என்னிடமும் முனாஃப் படேலிடமும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்ற பின்பு முழுசாக ஒரு ரிங் நிற்பதற்குள், இல்லை... இல்லை.. அரை ரிங்கின்போதே செல்போன் அழைப்பை எடுத்துவிடுவேன் என கூறியிருந்தார்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "அவர் சொன்னதை இப்போது செய்கிறாரா என்பதை இப்போது சோதித்து பார்க்க வேண்டும். கேப்டனுடன் பழகுவதை எப்போதும் வீரர்கள் உரிமையாக எடுத்துக்கொள்வார்கள். கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் பேசுவதில் பெரிதாக எந்தவொரு மாற்றமும் இருக்காது. என்னதான் ஜாலியாக அரட்டை அடித்தாலும் இறுதியில் பேச்சு கிரிக்கெட் பற்றிதான் முடியும்" என்கிறார் ஆர்.பி.சிங்.