கடைசி ஓவரில் பிராவோவுக்கு தோனி சொன்ன அட்வைஸ்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று போராடி வென்றது. இதன் மூலம் நான்காவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
ஐதராபாத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, அம்பத்தி ராயுடு, ரெய்னா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. 37 பந்துகளில் 79 ரன்கள் விளாசி ராயுடு ரன் அவுட் ஆனார். ரெய்னா 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் தோனி, தன் பங்கிற்கு 12 பந்துகளில் 25 ரன் கள் விளாசினார்
பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி தொடக்கத்தில் சரிந்தாலும் பின்பும் நிமிர்ந்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 84 ரன்களும் யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில், ரஷித் கானின் அதிரடி ஆட்டத்தால், வெற்றி பெறும் நிலையில் இருந்தது ஐதராபாத்.
கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை. 2 வது பந்தில் 2 ரன்களும் 3வது பந்தில் ஒரு ரன்னும் அடிக்கப்பட்டன. 4 மற்றும் 5 வது பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பறக்க விட்டார் ரஷித் கான். இதனால் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஐதராபாத் அணிக்கு . அந்த பந்தை சிறப்பாக வீசிய பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 4 ஆவது வெற்றி பெற்ற சென்னை அணி, 8 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. ஆட்ட நாயகனாக ராயுடு தேர்வு செய்யப்பட்டார்.
போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் தோனி, ‘அனுபவ வீரராக இருந்தாலும் பிராவோவுக்கும் சில நேரம் ஆலோசனை தேவைப்படுகிறது. கடைசி ஓவரை பிராவோ வீசினார். அப்போது இரண்டு பந்துகள் இருக்கும்போது பிராவோவின் திட்டத்தை மாற்றச் சொன்னேன். வேறு மாதிரி போட சொன்னேன். அதனால்தான் வெற்றி பெற முடிந்தது. தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டியது முக்கியம். இந்த பிட்ச் முந்தைய ஐபிஎல்லை விட நன்றாக இருந்தது. பேட்ஸ்மேன்கள், நாக் அவுட்டை நோக்கி நகரும் போது பந்துவீச்சாளர்கள் புதிய திட்டங்களுடன் வருவதை பார்க்க முடியும். அதனால் பெரிய ஸ்கோர் எடுப்பது எளிதானதல்ல. தீபக் சாஹரும் ஷர்துல் தாகூரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். அவர்களும் தவறி ழைக்கிறார்கள். தீபக், சிறப்பாக பந்துகளை ஸ்விங் செய்கிறார். ஷர்துலுக்கு சில போட்டிகள் மோசமாக அமைந்திருக்கிறது. ஆனாலும் வித்தியாசமான பந்துகளை வீசுகிறார். அவர்கள் அழுத்தமான வீரர்களாக வருவார்கள் என்று நம்புகிறேன்.
இந்தப் போட்டியில் ராயுடு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரை எந்த வரிசையில் இறக்குவது என்று நினைத்தேன். அவருக்கு நல்ல இடத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவரை எப்போதும் மதிக்கிறேன். எந்த வரிசையில் இறங்கினாலும் நம்பிக்கையாக ஆடுகிறார். இருந்தாலும் அவரை தொடக்க வீரராக பார்க்க விரும்புகிறேன். ஓபனிங்கில் அவர் அபாயகரமான பேட்ஸ்மேனாக இருக்கிறார்’ என்றார்.