டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டதால், பத்திரமாக அவர் வெளியேற்றப்பட்டார்.
விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடக்க இருந்தது. இதில் ஜார்கண்ட், பெங்களூர் அணிகள் மோத இருந்தன. இதற்காக இரு அணி வீரர்களும் அங்குள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஜார்கண்ட் அணியின் கேப்டனுமான தோனியும் இங்கு தங்கியிருந்தார். இன்று காலை ஆறரை மணியளவில் இந்த ஓட்டலில் தீபிடித்தது. இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தன. முன்னதாக தோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பத்திரமாக ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்தத் தீவிபத்து சம்பவத்தை அடுத்து இன்று நடப்பதாக இருந்த கிரிக்கெட் போட்டி நாளை தள்ளி வைக்கப்பட்டது.