சென்னை அணியின் கேப்டன் தோனியா? பென் ஸ்டோக்ஸோ? - கிறிஸ் கெயில் சொன்ன சுவாரஸ்ய பதில்!

சென்னை அணியின் கேப்டன் தோனியா? பென் ஸ்டோக்ஸோ? - கிறிஸ் கெயில் சொன்ன சுவாரஸ்ய பதில்!
சென்னை அணியின் கேப்டன் தோனியா? பென் ஸ்டோக்ஸோ? - கிறிஸ் கெயில் சொன்ன சுவாரஸ்ய பதில்!

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன்ஷிப் குறித்த கேள்விக்கு, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் சுவாரஸ்யமான, அதேசமயத்தில் ரசிகர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பதில் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 16-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் வகையில், கேரள மாநிலம் கொச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை மினி ஏலம் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களும் நடைபெற்றன. அதன்படி, 18.50 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரண், பஞ்சாப் அணியால் விலைக்கு வாங்கப்பட்டார். இதேபோல், ஆஸ்ரேலியா ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் 17.50 கோடி ரூபாய்க்கு மும்பை அணியும், 16.25 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியாலும் விலைக்கு வாங்கப்பட்டனர்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வீரர்கள் ஏலம் போனது இம்முறைதான் என்பதால், இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேநேரத்தில் சென்னை அணியில் கேப்டன் தோனி அடுத்தாண்டு உடன் ஓய்வுபெற உள்ளதாக கூறப்படும்நிலையிலும், ஆல் ரவுண்டர் டூவைன் பிராவோ ஓய்வு பெற்று உள்ளதாலும், இந்த இரண்டு விஷங்களையும் பூர்த்தி செய்யும் வகையில், சாம் கரணை எடுக்க முயற்சி செய்து கடைசியில், சென்னை அணி போராடி பென் ஸ்டோக்ஸை தேர்வு செய்தது. ஏனெனில், நடப்பாண்டுக்கான கேப்டனாக ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனும், ஆல் ரவுண்டருமான 31 வயது பென் ஸ்டோக்ஸ் எடுக்கப்பட்டதும், சென்னை அணியின் அடுத்த கேப்டன் அவர்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். டி20 தொடரில் பெரிதாக கேப்டன்ஷிப் அனுபவம் இல்லையென்றாலும், 2022-ம் ஆண்டில் நடைபெற்ற 10 டெஸ்ட் போட்டிகளில் 9 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். இந்த அனுபவம் அவருக்கு, ஐபிஎல் போட்டியிலும் கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜியோ சினிமாஸ் நிகழ்ச்சியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயிலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “தோனி விளையாடும் வரை, அவரே கேப்டனாக இருந்து அணியை வழி நடத்த வேண்டும். சென்னை அணியின் ஓய்வறையில், எம்எஸ் தோனி மற்றும் பென் ஸ்டோக்ஸ் என்ற இரு பெரும் அற்புதமான கிரிக்கெட் தலைகள் இருக்கப்போகின்றனர். எனினும், பென் ஸ்டோக்ஸ் ஒதுங்கி அமர்ந்து, எம்.எஸ். தோனியை மதித்து, அவரை தனது காரியத்தைச் செய்ய விடுவார் என்று நினைக்கிறேன். அணியில் உள்ள இளம் வீரர்களும், பென் ஸ்டோக்ஸிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். மேலும் சிஎஸ்கே அணியில் பிராவோ போன்றவர்கள் இன்னும் இருப்பது அவருக்கு நல்லது.

அணியின் கலாச்சாரத்துடன் பொருந்திப்போவது மிகவும் முக்கியம், என்னைப் பொறுத்தவரையில் எந்த சந்தேகமும் இல்லாமல், பென் ஸ்டோக்ஸ் அவரது அனுபவத்தை வைத்து, சென்னை அணியுடன் அற்புதமாக பொருந்தி போவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆல்-ரவுண்டர்கள் இல்லாத இந்த நேரத்தில் சென்னை அணி, பென் ஸ்டோக்ஸ் போன்ற ஆல் ரவுண்டரை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதுகிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தோனி விளையாடும் வரை அவரே கேப்னாக இருக்க வேண்டும் என்றும், அதேநேரத்தில் அவரின் ஓய்வுக்குப்பின் பென் ஸ்டோக்ஸ் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதுவரை. கிறிஸ் கெயிலும் பிரதிபலித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com