‘ஹர்பஜன் பந்து வீசவில்லை என்றாலும்..!’ - மனம் திறந்த தோனி!

‘ஹர்பஜன் பந்து வீசவில்லை என்றாலும்..!’ - மனம் திறந்த தோனி!

‘ஹர்பஜன் பந்து வீசவில்லை என்றாலும்..!’ - மனம் திறந்த தோனி!
Published on

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர், விறுவிறுப்பான ஆட்டங்களுக்குப் பிறகு இன்று இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று இறுதிப்போட்டியில் களம் காணுகின்றன. இந்தத் தொடரில் ஏற்கனவே சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மூன்று முறை மோதியுள்ளன. மூன்று முறையுமே சென்னை அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் ஐதராபாத் அணியை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் அனைத்து அணிகளுமே திணறியுள்ளது. ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இதற்குமுன் விளையாடி 3 போட்டிகளிலும் கடும் நெருக்கடியை, அந்த அணி சென்னைக்கு கொடுத்தது. இருப்பினும் தோனியின் வழிநடத்தலுக்கு முன்னர் அந்த அணியின் போராட்டம் ஈடுகொடுக்க முடியவில்லை. 

ஏனெனில் பேட்ஸ்மேன்களையும், பந்துவீச்சாளர்களையும் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப களமிறக்குவதில் வல்லவர் தோனி. அவரது தலைமை நிறைய போட்டிகளை வெற்றிக்கு அழைத்துச்சென்றுள்ளன. இந்த முறை ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சீனியர் அணி என்பது போன்று. ஆனால் சென்னை அணியின் தொடர் வெற்றிகள் விமர்சனங்களை உடைத்தெறிந்து, விமர்சித்தவர்களை அமைதியடையச் செய்தது. அதேபோன்று இளம் வீரர்களை சேர்க்காமல், ஹர்பஜன் சிங்கை அணியில் தோனி சேர்த்திருப்பதற்கும் விமர்சனங்கள் எழுந்தன. அதையும் தோனி கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ஹர்பஜனுக்கு வாய்ப்பளித்து வந்தார். இந்நிலையில் ஐதராபாத்துடனான கடந்த போட்டியில் ஹர்பஜன் பந்துவீச, தோனி வாய்ப்பளிக்கவில்லை. இது சர்ச்சைகளையும், கேள்விகளையும் ஏற்படுத்தியது. இறுதிப்போட்டியில் ஹர்பஜன் இடம் பெறுவாரா? என்ற கேள்விகளையும் எழுப்பியது.

இதுதொடர்பாக விளக்கமளித்த தோனி, “எனது வீட்டில் நான் நிறைய கார் மற்றும் பைக்குகள் வைத்துள்ளேன். அவற்றை நான் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. அணியில் 6 லிருந்து 7 பந்துவீச்சாளர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் அணியின் நிலையை பார்க்கின்றீர்கள், யார் பேட்டிங் செய்வது என பார்க்கின்றீர்கள். மேலும் அந்த நேரத்தில் என்ன தேவை என பார்க்கின்றீர்கள். நான் அணியின் சிறந்த எதிர்பார்ப்பு என்ன என்று பார்க்கிறேன். கடந்த போட்டியில் ஏன்? ஹர்பஜன் பந்துவீச வாய்ப்பு அளிக்க வில்லை என என்னிடம் நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. கடந்த போட்டியில் ஹர்பஜன் பந்துவீசவதற்கான தேவை ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. ஹர்பஜன் பந்துவீசவில்லை என்றாலும், அவரது அனுபவம் போட்டியின் அனைத்து விதங்களிலும் முக்கியமானது.” என்றார். இதன்மூலம் இன்றைய போட்டியிலும், சென்னை அணியில் ஹர்பஜன் கண்டிப்பாக இடம்பெறுவார் என்பதை தோனி சொல்லாமல் சொல்லிவிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com