தோனி, அவர் விரும்பும் வரை விளையாட முடியாது: கெளதம் கம்பீர் அதிரடி பேச்சு
தோனி கடந்த காலங்களில் பல சாதனைகளை செய்துள்ளார், ஆனால் அது கடந்துவிட்டது. யாராக இருந்தாலும் அவரவர் விரும்பும் வரை அணியில் விளையாட முடியாது என்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 2019 உலகக் கோப்பைக்காக தயாராகி வரும் நிலையில், முன்னாள் கேப்டன் தோனியின் மீது மறைமுகமாக பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் சமீப கால போட்டிகளில் தோனி குறைவான ரன்களை எடுத்தது குறித்து நேரடியாக யாரும் கேள்வியெழுப்பவில்லை. இதற்கு தற்போதைய கேப்டன் விராட் கோலி தோனிக்கு ஆதரவாக இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, அனைத்து வீரர்களும் தற்போதைய திறமையின் அடிப்படையில்தான் எடுக்க வேண்டும். மாறாக பழைய சாதனைகளை வைத்து எடுக்கக் கூடாது என்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.
கெளதம் கம்பீர் இஎஸ்பிஎன் கிர்க் இன்ஃபோ-க்கு அளித்த பேட்டியில், "தோனி அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் அவர் 2019 உலகக் கோப்பை வரை சிறந்த முறையில் விளையாட வேண்டும். இது தோனிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். தோனி கடந்த காலங்களில் பல சாதனைகளை செய்துள்ளார், ஆனால் அது கடந்துவிட்டது. யாராக இருந்தாலும் அவரவர் விரும்பும் வரை அணியில் விளையாட முடியாது. அதே சமயத்தில் தினேஷ் கார்த்திக்கை நாம் தவறவிட்டு விட்டோம். அவர் தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி, சிறப்பாக விளையாடுகிறார். அவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பராகவும் உள்ளார் என்பது அவரிடம் உள்ள கூடுதல் திறமை" என்று கூறினார்.