தோனி படிச்ச யுனிவர்சிட்டியில் நான் மாணவன்: தினேஷ் கார்த்திக்
தோனி ஒரு யுனிவெர்சிட்டி டாப்பர், தான் இன்னும் படிக்கும் மாணவர் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் 8 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். வங்கதேசத்தின் பக்கம் இருந்த வெற்றியை தனது அதிரடியான ஆட்டத்தால் இந்தியாவின் பக்கம் கொண்டுவந்தார் தினேஷ் கார்த்திக். இதனால், தினேஷ் கார்த்திக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பலர் தோனியைப் போல் இறுதியில் ஆட்டத்தை முடித்துவிட்டார் என்று புகழ்ந்துள்ளனர். 2016ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கடைசி பந்தில் தோனி சிறப்பாக ரன் அவுட் செய்து வங்கதேச அணியை வீழ்த்தியதை பலர் சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி தேடி தந்ததிலும் தோனியை போன்று தினேஷ் கார்த்தி விளையாடியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக் தோனியுடன் ஒருபோதும் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அவருடைய பயணமும் என்னுடையதும் முற்றிலும் வேறானது. அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் தற்போது இளம் வீரர்களுக்கு உதவி வருகிறார். அவரை என்னுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல. அவர் யுனவர்சிட்டி டாப்பர். நானோ அதில் இன்னும் மாணவனாக பயின்று கொண்டிருக்கிறேன். நான் தற்போது இருக்கும் நிலை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி 2004 டிசம்பர் மாதம் தான் அறிமுகம் ஆனார். ஆனால், தினேஷ் கார்த்திக், தோனிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இந்திய அணியில் இடம்பிடித்தவர். தோனி தன்னுடைய அசாத்திய திறமையால் கேப்டன் பொறுப்பு வரை உயர்ந்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் தன்னுடைய இடத்தை தக்கவைக்க இன்னும் போராடி வருகிறார்.