தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது - ராஜீவ் சுக்லா
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் திறன் உள்ளது என்று ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு அவர் எந்தக் கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவரின் ஓய்வு முடிவு குறித்த சலசலப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தன.
இந்தச் சமயத்தில் பிசிசிஐ வெளியிட்ட இந்திய வீரர்களின் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறாமால் இருந்தது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த அவரது ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூகவலைத்தளத்தில் கொட்டித்தீர்த்தனர். இருப்பினும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதால் அதனை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரின் முன்னாள் சேர்மன் ராஜீவ் சுக்லா தோனி ஓய்வு குறித்து பேசுகையில், “தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாடும் திறன் உள்ளது. அவர் சிறந்த கிரிக்கெட் வீரர். எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
மேலும், பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இருந்து தோனி நீக்கப்பட்டது குறித்து பேசிய அவர், பிசிசிஐ-ன் கொள்கைகளைக் குறிப்பிட்டு ஒரு கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட்டில் அவரது எதிர்காலத்தை முடிவு செய்வதற்கான முழு அதிகாரம் இருக்கிறது என்றும் அதனால் தோனி, அவரது ஒய்வு குறித்து முடிவு செய்வதற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

