பாகிஸ்தான் அணி ஜெர்ஸியில் தோனியின் பெயர்... நெகிழவைத்த ரசிகர்..!
பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் தனது ஜெர்ஸியில் தோனியின் பெயர் மற்றும் அவரது எண்ணை பதிவு செய்து வந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனையடுத்து பி.சி.சி.ஐ வெளியிட்ட இந்திய வீரர்களின் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் தோனியின் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூகவலைதளங்களில் கொட்டி தீர்த்தனர். இணையத்தில் இப்படி ஒரு களேபரம் நடந்துகொண்டிருக்க, தோனியோ தனது குடும்பத்துடன் ஜாலியாக தனது நேரத்தைக் கழித்து வந்தார்.
இதனிடையே வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ள தோனி, சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றார். இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தோனி ரசிகர்கள் அவரது விளையாட்டை காண ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த ஆவல் இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் சென்று விட்டது. பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகள் போன்றே 20 ஓவர்கள் கொண்ட பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள்) நடைபெற்று வருகின்றன.
இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த மார்ச் 8 ஆம் தேதி ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண வந்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ரசிகர்கள் ஒருவர் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளார். அதற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை அணிந்திருந்த அந்த ரசிகர் அதில் தோனியின் பெயரையும், அவரது 7ஆம் எண்ணையும் பதிவிட்டிருந்தார்.
போட்டி நடக்கும் போதே இது பலரது கவனத்தை ஈர்த்தது. பின்னர், தோனியின் பெயர் இடம்பெற்ற ஜெர்ஸியுடன் கூடிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த ரசிகர் பதிவிட்டார். அந்த ட்விட்டர் பதிவில், “எங்களது முழு ஆதரவு எப்போதும் தோனிக்கு உண்டு” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை தோனி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதனால், இந்தப் பதிவு தற்போது வைரலாகி உள்ளது.