தோனி எப்போது சென்னை வருகிறார் ? வெளியானது தகவல்

தோனி எப்போது சென்னை வருகிறார் ? வெளியானது தகவல்
தோனி எப்போது சென்னை வருகிறார் ? வெளியானது தகவல்

13 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 29 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. 8 அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை நேற்று வெளியானது. அதனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொண்டது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்தப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி எப்போது பயிற்சிக்காக சென்னை வருவார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இப்போது அவர் எப்போது சென்னை வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆம், மார்ச் 1 ஆம் தேதி தோனி சென்னை வருகிறார் என சிஎஸ்கே நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பேசிய சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தோனி மார்ச் 1 ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் தோராயமாக இரு வாரங்கள் சென்னையிலேயே தங்கி பயிற்சிகளை மேற்கொள்வார். பின்பு 5 நாள் ஓய்வுக்காக ஜார்கண்ட் சென்றுவிட்டு, போட்டி தொடங்கும் மும்பைக்கு நேரடியாக செல்வார். இப்போது இங்கு ஏற்கெனவே ரெய்னா, ராயுடு ஆகியோர் மூன்று வாரங்களுக்கு மேலாக பயிற்சி மேற்கொண்டனர். இப்போது அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் மார்ச் 2 ஆம் தேதி சென்னை வருகின்றனர். சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வமான பயிற்சிகள் மார்ச் 10 ஆம் தேதி தொடங்குகிறது” என்றார் அவர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு அவர் எந்தக் கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவரின் ஓய்வு முடிவு குறித்த சலசலப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தன. இந்தச் சமயத்தில் பிசிசிஐ வெளியிட்ட இந்திய வீரர்களின் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறாமால் இருந்தது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த தோனி ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூகவலைத்தளங்களில் கொட்டித்தீர்த்தனர். இருப்பினும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதால் அதனை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com