'' சென்னை அணி செல்லும் வழக்கமான பாதை இது தான்'' - கேப்டன் தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது தகுதிச் சுற்று விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி டெல்லி வீரர்களை கட்டுப்படுத்தினர். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.
இதனையடுத்து, 148 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் டு பிளிசியஸ் 50(39), ஷேன் வாட்சன் 50(32) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரெய்னா 11 ரன்னில் அக்ஸர் ஓவரில் போல்ட் ஆனார். அதேபோல், கடைசி கட்டத்தில் தோனியும் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சென்னை விளையாடுகிறது.
போட்டிக்கு பின் பேசிய கேப்டன் தோனி, ''7.30 மணிக்கே ஆட்டம் தொடங்குகிறது என்பதால் மைதானம் சற்று ஈரப்பதமாக இருக்கும். அப்படி என்றால் அதிக ரன்களை அடிக்க முடியாது. அதனால் தான் பந்துவீச தீர்மானித்தோம். அதே நேரம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமென்பதால் அவர்களை அதிகம் பயன்படுத்தினேன். அவர்களும் சிறப்பாக செயல்பட்டு டெல்லி அணியை கட்டுக்குள் வைத்தனர். டெல்லி அணியில் பல இடக்கை ஆட்டக்காரர்கள் இருந்தார்கள். அதற்காக நாங்களும் இடக்கை பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினோம்.
டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்தது ரன்களை கட்டுப்படுத்த உதவியது. எங்களது பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. சென்னை அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வழக்கமான பாதை இது தான். கடந்த ஆண்டு மட்டுமே கொஞ்சம் மாற்றம்'' என்று தெரிவித்தார்
தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பவர்பிளேவிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். தொடக்கம் சரியாக அமையவில்லை. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சு சிறப்பானதாக இருந்தது. ஆனால் இந்த ஐபிஎல் எங்களுக்கு சிறப்பான ஒன்று என தெரிவித்தார்.