இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், தோனிக்கு பந்துவீசிய சம்பவம் நேற்று நடந்தது.
உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் கபில்தேவ், தோனி. இருவரையும் இணைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கி வருகிறார் பெங்கால் இயக்குனர் அரிந்தம் சில். இதற்கான படப்பிடிப்பு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. கபில்தேவ் பந்துவீச, விக்கெட் கீப்பிங் செய்யும் தோனி அதை பிடிப்பது போலவும் பின்னர் பேட்டிங் செய்வது போலவும் காட்சி படமாக்கப்பட்டது.
இதுபற்றி அரிந்தம் சில் கூறும்போது, ‘இதே மைதானத்தில் கபில்தேவ் ஆடிய போட்டியையும் தோனி ஆடிய கிரிக்கெட் போட்டியையும் பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவர்களை இதே மைதானத்தில் இயக்குவது வாழ்நாள் மகிழ்ச்சி. என்னால் மறக்க முடியாத நிகழ்வு இது. தோனியும் கபில்தேவும் இதில் பங்கேற்ற சிறுவர்களுக்கு ஆக்ரோஷமாக விளையாடுவது எப்படி என்பதையும் தன்னம்பிக்கை அளித்ததையும் மறக்க முடியாது. கேமரா முன் தோனி இயல்பாக நடிக்கிறார். ரீடேக் வாங்குவதில்லை’ என்றார்.