மொத்த சம்பளத்தையும் பிரதமர் நிதிக்கு அளித்த சச்சின்
தன்னுடைய மொத்த சம்பளத்தையும் பிரதமர் நிவாரண நிதிக்கு சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.
சச்சினின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அவருக்கு சம்பளம் மற்றும் இதர உதவித்தொகைகள் சேர்த்து சுமார் 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த மொத்த பணத்தையும், ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு தானமாக சச்சின் வழங்கியுள்ளார்.
சச்சின் நாடாளுமன்றத்தில் மிகவும் குறைவான வருகைப் பதிவேடு வைத்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஆனால், சச்சின் தனக்கு வழக்கப்பட்ட நிதியை பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. சச்சினுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி நிதியாக 30 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதில், கல்வி தொடர்பான சுமார் 185 நலத்திட்டங்களுக்கு 7.4 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். 20 பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தினார்.
மேலும் தனக்கு அளிக்கப்பட்ட நிதியைக் கொண்டு மகாராஷ்டிராவில் உள்ள டோன்ஜா மற்றும் ஆந்திராவில் உள்ள புட்டம் ராஜு கந்திரிகா ஆகிய இரண்டு கிராமங்களை சச்சின் தத்தெடுத்திருந்தார். சச்சின் செயல்பாடுகளுக்கு பிரதமர் அலுவலகமும் நன்றி தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு மாநிலங்களவை சிறப்பு எம்.பியாக பதியேற்ற சச்சினின் பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது.