“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்

“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்
“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்

ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்றது ஏன்? என பங்களாதேஷ் கேப்டன் மோர்டசா தெரிவித்துள்ளார்.

14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில், 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் வெளியேறின. தொடர்ந்து நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறின. இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதின. 

இதில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் லிடான் தாஸ் 121 (117) ரன்கள் குவித்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்கள் எடுக்கவில்லை. இதனால் அந்த அணி இக்கட்டான நிலையை அடைந்தது. அந்த அணியில் ஹாசன் 32 (59) மற்றும் சர்கார் 33 (45) ரன்கள் சேர்த்ததால் தான் அணி 200 ரன்களையே கடக்க முடிந்தது. இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணி கடைசிப் பந்துவரை பேட்டிங் செய்து போராட்டமான வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா 48 (55), தினேஷ் கார்த்திக் 37 (61), தோனி 36 (67), ஜாதவ் 23 (27), ஜடேஜா 23 (33), புவனேஷ்குமார் 21 (31) ரன்கள் எடுத்தனர். விராட் கோலி இல்லாதது பெரும் இழப்பாக இந்தப் போட்டியில் கருதப்பட்டது.

இறுதிப்போட்டி வரை சென்று தோற்றதால் பங்களாதேஷ் அணி வீரர்கள் சோகமடைந்தனர். ஆட்டத்தில் தோற்றாலும் ரசிகர்கள் மனதை வென்றுவிட்டதாக அந்த அணியின் கேப்டன் மோர்டசா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒழுங்கில்லாத சில காரணத்தால் இந்தத் தோல்வி ஏற்பட்டது. அவை ஒழுங்காக நடந்திருந்தால் தோல்வி ஏற்பட்டிருக்காது. இறுதிப்போட்டி என்பதால் எங்கள் வீரர்கள் சிந்தனையில் ஏதோ தடுமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அதனால் அவர்கள் விக்கெட் போகும் நேரத்தில் ஒழுங்கான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறைவான ரன்களில் அனைவரும் அவுட் ஆகிவிட்டோம். அது இந்தியாவிற்கு வெற்றியை எளிதாக்கிவிட்டது. இருந்தாலும் இறுதிப்பந்து வரை போராடினோம். அடுத்தமுறை இந்தப் பிழையை எங்கள் வீரர்கள் செய்யமாட்டார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com