டு பிளிசிஸ் அபார சதம்: தோல்வியை தவிர்க்க போராடுகிறது ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசில் அபார சதமடித்தார். ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்கப் போராடி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரண்டு டெஸ்ட்களில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்த அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 488 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 152 ரன்களும் பவுமா 95 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 221 ரன்கள் எடுத்து பாலோ-ஆனை சந்தித்தது. ஆனால் ‘பாலோ-ஆன்’ கொடுக்காமல் 267 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 39 ரன்னுடனும், கேப்டன் டு பிளிசிஸ் 34 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அபாரமாக ஆடிய டு பிளிசிஸ் சதம் அடித்தார். அவருக்கு இது 8-வது டெஸ் சதம். அணியின் ஸ்கோர் 264 ரன்னாக உயர்ந்த போது, டு பிளிசிஸ் 120 ரன்களில் ஆட்டம் இழந்தார். தேனீர் இடைவேளைக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், லியான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து 612 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. ரென்ஷா 5 ரன்னிலும், கவாஜா 7 ரன்னிலும், ஜோபர்ன்ஸ் 42 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து இருந்த போது வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹேன்ட்ஸ்கோம்ப் 23 ரன்னுடனும், ஷான் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இந்தப் போட்டியையும் தென்னாப்பிரிக்க வெல்ல அதிக வாய்ப்புள்ளது.